சிறுமியை கடத்திய விவகாரம்: போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை


சிறுமியை கடத்திய விவகாரம்: போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 7 Oct 2018 4:42 AM IST (Updated: 7 Oct 2018 4:42 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கடத்திய விவகாரத்தில், வாலிபரை கைது செய்யாமல் இருக்க உதவி கமிஷனர் பேரம் பேசினாரா? என போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்,

சேலம் குமரகிரிபேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை, வீராணம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் கடத்தி சென்றுவிட்டதாக சிறுமியின் பெற்றோர் தரப்பில் அம்மாபேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, வீராணம் பகுதியில் இருந்த அவர்கள் இருவரையும் மீட்டனர்.

இதையடுத்து வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யாமல் இருக்க அவரது உறவினர்கள், போலீஸ் உதவி கமிஷனர் ஒருவர் மூலம் சிறுமியின் பெற்றோரிடம் சமரசம் பேசினர். ஆனால் இதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. இருப்பினும், உதவி கமிஷனர் கூறியதன் பேரில் மகளிர் போலீசார் வாலிபர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என தெரிகிறது. இதற்காக வாலிபரின் பெற்றோரிடம் இருந்து உதவி கமிஷனர் பேரம் பேசி பணம் வாங்கியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து சிறுமி கடத்தல் விவகாரத்தில் வாலிபரை கைது செய்யாமல் இருக்க உதவி கமிஷனர் பேரம் பேசினாரா? என்பது குறித்து மாநகர துணை கமிஷனர் தங்கதுரை மற்றும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரையிடம் கேட்டபோது, ‘சிறுமியின் பெற்றோர் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இருப்பினும், உதவி கமிஷனர் மீது புகார் வந்துள்ளதால் அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்றார்.


Next Story