தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிப்பதில் சேலத்துக்கு 2-வது இடம் - அரசு விழாவில் கலெக்டர் தகவல்


தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிப்பதில் சேலத்துக்கு 2-வது இடம் - அரசு விழாவில் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 6 Oct 2018 11:36 PM GMT (Updated: 6 Oct 2018 11:36 PM GMT)

தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிப்பதில் சேலம் மாவட்டம் 2-வது இடம் பிடித்துள்ளதாக சேலத்தில் நடந்த அரசு விழாவில் கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.

சேலம்,

சேலம் மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நடந்த பேச்சு, ஓவியம், கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா சேலம் அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் பெரியசாமி வரவேற்றார். கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் கயாரத் மோகன்தாஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற ஜனனி, ஹேமலதா, அறிவுச்சுடர் மற்றும் ஓவியம், அறிவுத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் ரோகிணி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். மேலும், காடு வளர்ப்பு திட்டம் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு ரூ.2 லட்சம், தனிநபர் கடன் உதவி தொகையாக 27 பெண்களுக்கு ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பயிற்சி கலெக்டர் வந்தனா கார்க், உதவி வன பாதுகாவலர்கள் பிரபா, குமார், சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கீதாகென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் ரோகிணி பேசும்போது, வனம் இருந்தால் தான் மனிதன் சுகாதாரமாக வாழ முடியும். இதனால் வனப்பகுதியை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலத்தில் சேர்வராயன் மலை, கல்வராயன்மலை, ஜருகுமலை உள்ளிட்ட பல்வேறு மலைகள் உள்ளன. தமிழகத்தில் வனப்பரப்பு பகுதியை அதிகரித்து வருவதில் சேலம் மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளது. இதனை முதலிடத்தில் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வனப்பகுதிக்குள் மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும். வன உயிரினங்களை நாம் பாதுகாக்க வேண்டும். நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் முதற்கட்டமாக சின்னேரியில் பனை விதைகள் நடவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் விரைவில் 100 ஏரிக்கரைகளில் பனை விதைகள் நடப்படும், என்றார்.


Next Story