நகர பகுதியில் கலெக்டர் ஆய்வு; கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வார உத்தரவிட்டார்


நகர பகுதியில் கலெக்டர் ஆய்வு; கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வார உத்தரவிட்டார்
x
தினத்தந்தி 7 Oct 2018 5:39 AM IST (Updated: 7 Oct 2018 5:39 AM IST)
t-max-icont-min-icon

புதுவை நகர பகுதியில் கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வாரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்த மழை நேற்று அதிகாலை வரை நீடித்தது. நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை நகர பகுதியில் 4 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. நேற்று காலை வானம் வெறிச்சோடி காணப்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு பிறகு வெயில் தலைகாட்டியது. மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சாரல் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று பொது விடுமுறை விடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். வழுதாவூர் சாலையில் இருந்து புறப்பட்ட அவர் புதுச்சேரி நகர் பகுதி வழியாக மரப்பாலத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து 100 அடி ரோட்டில் ஜோதிநகர் பகுதிக்கு சென்றார். அங்கு தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், கழிவுநீர் வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை சரிசெய்து, தூர்வார அதிகரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதேபோல் இந்திராகாந்தி சிலை அருகே 100 அடி ரோட்டில் தேங்கியிருந்த மழைநீரை அகற்ற அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் வருவாய்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை, மின்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story