கனமழை எச்சரிக்கை எதிரொலி; அரசு ஊழியர்கள் விடுமுறையின்றி பணியாற்ற வேண்டும் - கவர்னர் கிரண்பெடி உத்தரவு


கனமழை எச்சரிக்கை எதிரொலி; அரசு ஊழியர்கள் விடுமுறையின்றி பணியாற்ற வேண்டும் - கவர்னர் கிரண்பெடி உத்தரவு
x
தினத்தந்தி 7 Oct 2018 5:47 AM IST (Updated: 7 Oct 2018 5:47 AM IST)
t-max-icont-min-icon

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக புதுவையில் அரசு ஊழியர்கள் விடுமுறையின்றி பணியாற்ற வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்தது. இங்கு இதுவரை ஒரே நாளில் 15 செ.மீ.க்கு மேல் மழை பெய்தது இல்லை. ஆனால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. எனவே மழையை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தேவையான நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக அதிகாரிகள் எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கவர்னர் கிரண்பெடி நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். முத்தியால்பேட்டை வசந்தம் நகர், கணபதி நகர் பகுதிகளுக்கு சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டார். இதேபோல் அனைத்து பகுதிகளிலும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கவர்னர் அறிவுறுத்தினார்.

அங்கிருந்து புறப்பட்ட கவர்னர் கிரண்பெடி, கருவடிக்குப்பம் வெள்ளவாரி வாய்க்காலை காரில் இருந்தபடி பார்வையிட்டார். அப்போது அங்கு தேங்கி இருந்த குப்பைகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவசர கால உதவி மையத்துக்கு சென்று, அங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார்.

பின்னர் அங்கு வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் கவர்னர் கிரண்பெடி ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி, தேசிய பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் பங்கஜ் குமார் ஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆலோசனை கூட்டத்துக்கு பின் கவர்னர் கிரண்பெடி நிருபர்களிடம் கூறியதாவது:–

புதுச்சேரிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டேன். அரசு ஊழியர்கள் அனைவரும் விடுப்பு எடுக்காமல் அடுத்த 24 மணி நேரத்திற்கு பணியில் இருக்க வேண்டும். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு புதுச்சேரி முழுவதும் 197 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. புதுச்சேரியில் இதுவரை மழை தொடர்பாக 26 புகார்கள் பெறப்பட்டது. அந்த புகார்கள் மீது உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.

பொதுமக்கள் ஒத்துழைப்புடன் குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்றால் எங்கும் மழைநீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்படாது. கழிவுநீர் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் குப்பைகளை பொதுமக்கள் வீசக்கூடாது. நாங்கள் வடகிழக்கு பருவமழையை வரவேற்பதுடன், அதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட கவர்னர் கிரண்பெடி புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.


Next Story