கவனம் ஈர்த்த ‘காவலர்’


கவனம் ஈர்த்த ‘காவலர்’
x
தினத்தந்தி 7 Oct 2018 4:19 PM IST (Updated: 7 Oct 2018 4:19 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் தேர்வு எழுதுவதற்கு வந்த பெண்மணியின் 4 மாத குழந்தையை தேர்வு முடியும் வரை கையில் ஏந்தி அன்பாக கவனித்துக்கொண்ட போலீஸ்காரரின் செயல் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

போலீஸ் தேர்வு எழுதுவதற்கு வந்த பெண்மணியின் 4 மாத குழந்தையை தேர்வு முடியும் வரை கையில் ஏந்தி அன்பாக கவனித்துக்கொண்ட போலீஸ்காரரின் செயல் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அழுது கொண்டிருந்த குழந்தையை சிரிக்க வைத்து கொஞ்சி மகிழும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி அவருக்கு பாராட்டையும் பெற்றுக்கொடுத்துள்ளது.

அந்த போலீஸ்காரர் பெயர் முஜிப் உர் ரஹ்மான். இவர் தெலுங்கானா மாநிலத்தின் மெகபூப் நகர் மாவட்டத்திலுள்ள மூஷாபட் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிகிறார். மெகபூப் நகரிலுள்ள பள்ளியில் போலீஸ் தேர்வுக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த தேர்வு மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார். அங்கு தேர்வு எழுதவந்த ஒரு பெண்மணி தனது 4 மாத பச்சிளம் குழந்தையை உடன் அழைத்து வந்த 14 வயது சிறுமியிடம் ஒப்படைத்துவிட்டு தேர்வு எழுத சென்றுவிட்டார். தாயின் அரவணைப்பு கிடைக்காமல் அந்த குழந்தை கதறி அழுதவண்ணம் இருந்திருக்கிறது. குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் அந்த சிறுமி தவித்து கொண்டிருந்திருக்கிறார். அதை கவனித்த முஜிப் உர் ரஹ்மான் குழந்தையை வாங்கி அதனுடன் கொஞ்சி மகிழ்ந்து அழுகையை நிறுத்தியிருக்கிறார். தேர்வு எழுத சென்ற தாயார் திரும்பி வரும்வரை குழந்தைக்கு விளையாட்டு காண்பித்து சிரிக்கவைத்து தானும் மகிழ்ந்திருக்கிறார்.

இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஐ.பி.எஸ். அதிகாரி ரேமா ராஜேஸ்வரி சமூகவலைத்தளத்தில் பதிவிட, அது பலதரப்பினரையும் மனம் நெகிழவைத்துவிட்டது.

‘‘அந்த பெண்மணி ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவர். முதுகலைப்படிப்பு முடித்திருக்கிறார். ஆனால் படிப்புக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறார். குடும்பத்துக்காக வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் போலீஸ் தேர்வு எழுத வந்திருக்கிறார். அவர் அழைத்து வந்த சிறுமியால் குழந்தையை பக்குவமாக பார்த்துக்கொள்ள முடியவில்லை. குழந்தையும் அழுது கொண்டே இருந்தது. அதனால் குழந்தையை குஷிப்படுத்த முயற்சித்தேன். நாங்கள் பொதுமக்களுக்காக சேவை செய்வதற்கே இருக்கிறோம். அதன் அங்கமாகவே இதனை செய்தேன்’’ என்கிறார், முஜிப் உர் ரஹ்மான்.

48 வயதாகும் ரஹ்மானுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். மகன் சீனாவில் மருத்துவ படிப்பும், மகள் பள்ளிப்படிப்பும் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

Next Story