தாமிரபரணி புஷ்கர விழா: எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் யாகசாலை அமைக்கும் பணி மும்முரம்


தாமிரபரணி புஷ்கர விழா: எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் யாகசாலை அமைக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 8 Oct 2018 4:00 AM IST (Updated: 7 Oct 2018 11:06 PM IST)
t-max-icont-min-icon

தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் யாகசாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் ஆய்வு செய்தார்.

நெல்லை,

தாமிரபரணி மகா புஷ்கர விழா வருகிற 11-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை தாமிரபரணி ஆற்றில் உள்ள படித்துறைகளில் நடக்கிறது. நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் தாமிரபரணி மகா புஷ்கர விழா நடத்தப்படுகிறது. இந்த புஷ்கர விழா எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயுத்துறை படித்துறையில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு தசமகா வித்யா யாகம், கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.

இதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு கொடியேற்றம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து ஹோமம் ஆகியவை நடக்கிறது. 10-ந்தேதி காலையில் மகாகாளி யாகம் நடக்கிறது. 11-ந்தேதி காலை 6 மணிக்கு சுவாமி தீர்த்தவாரி, 9 மணிக்கு யாகசாலை பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு, மகா ஆரத்தியை எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் தொடங்கி வைக்கிறார்.

12-ந்தேதி காலையில் ராஜமாதங்கி யாகம், 13-ந்தேதி காலையில் திரிபுர பைரவி யாகம், மாலையில் வைணவ திருவிழா, 14-ந்தேதி காலையில் சின்னமஸ்தா யாகம், மாலையில் வைணவ திருவிழா, 15-ந்தேதி காலையில் ஷோடச யாகம், மாலையில் வைணவ திருவிழா நடக்கிறது. 16-ந்தேதி காலையில் தூமாவதி யாகம் நடக்கிறது. 17-ந்தேதி காலையில் பகளாமுகி யாகம், 18-ந்தேதி காலையில் கமலாத்மிகா யாகம், 19-ந்தேதி காலையில் புவனேசுவரி யாகம், 20-ந்தேதி காலையில் வராகி யாகம், 21-ந்தேதி காலையில் பிரத்திரிங்காரா யாகம், 22-ந்தேதி காலையில் மகா சண்டியாகம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 5 மணிக்கு சுவாமிக்கு தீர்த்தவாரி, கோபூஜையும், மாலை 4 மணிக்கு ஆரத்தியும் நடக்கிறது.

தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் தினமும் பல்வேறு பூஜைகள், யாகங்கள், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதற்காக அங்கு யாகசாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி வருகிற 13, 14, 15-ந் தேதிகளில் வைணவ திருவிழா நடக்கிறது. இதில் ஏராளமான ஜீயர்கள் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசுகிறார்கள்.

இதையொட்டி எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயுத்துறையில் புதிதாக கருங்கல்லால் படித்துறை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கவர்னர் வருகையையொட்டி நெல்லை அருகன்குளம், கோசாலை பகுதியில் சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணியையும், கவர்னர் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் நேற்று அங்கு வந்து ஆய்வு செய்தார். அவருடன் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Next Story