ஊழியர் மீது மர்மநபர்கள் தாக்குதல்: தஞ்சை அருகே ரெயில்வே கேட் மூடப்பட்டது ரெயிலை மறித்து பொதுமக்கள் போராட்டம்


ஊழியர் மீது மர்மநபர்கள் தாக்குதல்: தஞ்சை அருகே ரெயில்வே கேட் மூடப்பட்டது ரெயிலை மறித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2018 11:00 PM GMT (Updated: 7 Oct 2018 5:47 PM GMT)

தஞ்சை அருகே ரெயில்வே ஊழியரை மர்ம நபர்கள் தாக்கியதால் ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கேட்டை திறக்கக்கோரி ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,


தஞ்சையை அடுத்துள்ளது வண்ணாரப்பேட்டை. இந்த பகுதியில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த வழியாக பஸ்சும் சென்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு இந்த கேட்டில் வடமாநிலத்தை சேர்ந்த அர்ஜூன்மீனா என்பவர் கேட்கீப்பராக பணியில் இருந்தார். அப்போது கேட் மூடப்பட்டு இருந்தது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கேட்டை திறக்க சொல்லி கேட் கீப்பர் அர்ஜூன்மீனாவுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவர்கள், அர்ஜூன்மீனாவை தாக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்து அவர் ரெயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் ரெயில்வே தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவித்தார். இது குறித்து தஞ்சை ரெயில்வே போலீசிலும் அவர் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கார்த்திகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


இந்த நிலையில் ரெயில்வே நிர்வாகம் உத்தரவின் பேரில் வண்ணாரப்பேட்டையில் உள்ள ரெயில்வே கேட் நேற்று மதியம் 3.30 மணி அளவில் மூடப்பட்டது. மேலும் இந்த கேட் நிரந்தரமாக மூடப்படுவதாகவும் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனால் வண்ணரப்பேட்டைக்கு வர வேண்டிய பஸ்சும் வரவில்லை. மேலும் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பொதுமக்கள், வாகனங்களில் தங்கள் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் தலைமையில் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கேட்டை திறக்குமாறு வலியுறுத்தினர். ஆனால் கேட் திறக்கப்படவில்லை. இதையடுத்து அவர்கள் அந்த வழியாக வந்த ஜனசதாபதி ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இது குறித்து தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீசார், வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதன் பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

மேலும் கேட் திறக்காவிட்டால் மீண்டும் ரெயில் மறியலில் ஈடுபடுவோம். ரெயில்வே கேட் திறக்கும் வரை நாங்கள் கலைந்து செல்லமாட்டோம் என பொதுமக்கள் அங்கேயே காத்திருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வண்ணாரப்பேட்டைக்கு வந்த பஸ் ரெயில்வே கேட்டில் இருந்து சிறிது தொலைவில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு திரும்பிச்சென்றது.

இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை உதவி கலெக்டர் சுரேஷ், தாசில்தார் அருணகிரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நாளை (இன்று) உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

Next Story