கோவை ரெயில் நிலையத்தில் குழந்தையை தவிக்க விட்டுச்சென்ற பெண் பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்


கோவை ரெயில் நிலையத்தில் குழந்தையை தவிக்க விட்டுச்சென்ற பெண் பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 8 Oct 2018 4:30 AM IST (Updated: 8 Oct 2018 12:09 AM IST)
t-max-icont-min-icon

கோவை ரெயில் நிலையத்தில் குழந்தையை தவிக்க விட்டுச்சென்ற பெண்ணை பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கோவை,

கோவை ரெயில் நிலையத்தில் உள்ள 6–வது நடைமேடையில் முனீஸ்வரன் கோவில் அருகே நேற்று முன்தினம் மாலை ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. சத்தம் கேட்டு அந்த பகுதியில் நின்றிருந்த டீ விற்பனையாளர்கள் இஸ்மாயில், செல்வம் ஆகியோர் சென்று பார்த்தனர். அப்போது அங்கு துணியில் சுற்றப்பட்ட நிலையில் ஒரு பச்சிளம் குழந்தை கிடந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் குழந்தையை தவிக்கவிட்டு சென்றவர் யார் என்று அந்த பகுதியில் தேடினர். அதேநேரம் ஒரு இளம்பெண் அவசர அவசரமாக ஓடினார். இதனை பார்த்த அவர்கள் அங்கிருந்த பயணிகளின் உதவியுடன் அந்த பெண்ணை பிடித்தனர்.

பின்னர் இதுகுறித்து கோவை ரெயில்வே போலீசிசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையில் சப்– இன்ஸ்பெக்டர் சாந்தி உள்பட போலீசார் அந்த பெண் மற்றும் குழந்தையை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

விசாரணையில், அந்த பெண் கோவை மாவட்டம் அன்னூர் புளியம்பட்டியை சேர்ந்த சத்யா (வயது 20) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:–

சத்யா நாமக்கல்லில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தபோது அங்கு அதே நிறுவனத்தில் வேலை பார்த்த தனசேரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே சத்யா கர்ப்பமடைந்தார். சத்யா 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது அவரை தனசேகரன் விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.

இந்த நிலையில் சத்யாவுக்கு காட்பாடி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 29–ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தையை வளர்க்க முடியாது என்று எண்ணிய அவர் கோவை ரெயில் நிலையத்தில் குழந்தையை போட்டு எங்காவது சென்றுவிடலாம் என்று நினைத்துள்ளார்.

அந்த குழந்தை பிறந்து 8 நாட்களே ஆவதால் அதை குழந்தைகள் நல வாரிய நிர்வாகிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். சத்யா போலீசார் கோவையில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தற்போது அந்த குழந்தை கோவை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளது. அங்கு டாக்டர்கள் அந்த குழந்தையை நன்கு பராமரித்து வருகின்றனர். அங்கு நன்கு தேறிய பிறகு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும் என்று அரசு ஆஸ்பத்திரி இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் சவுந்திரவேல் தெரிவித்தார்.


Next Story