திருவாரூர் அருகே கல்லூரி மாணவர், ஆற்றில் மூழ்கி பலி நண்பனை காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்


திருவாரூர் அருகே கல்லூரி மாணவர், ஆற்றில் மூழ்கி பலி நண்பனை காப்பாற்ற முயன்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 8 Oct 2018 4:15 AM IST (Updated: 8 Oct 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே நண்பனை காப்பாற்ற முயன்றபோது ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள கொடிக்கால்பாளையத்தை சோந்தவர் இப்ராஹிம். இவருடைய மகன் சபிபுதீன் (வயது19). இவர் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அதே கல்லூரியில் புலிவலத்தை சேர்ந்த அய்யப்பன் மகன் அபினாஷ் (20) என்பவரும் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று சபிபுதீன், அபினாஷ் ஆகிய 2 பேரும் மற்றும் சில நண்பர்களுடன் திருவாரூர் அருகே பாண்டவையாற்றின் மருவத்தூர் மதகு பகுதியில் குளிக்க சென்றனர்.

அப்போது ஆற்றில் தண்ணீர் அதிக வேகத்தில் சென்றது. இதன் காரணமாக அபினாஷ், ஆற்றில் இழுத்து செல்லப்பட்டார். இதை பார்த்து பதறிப்போன சபிபுதீன், அபினாசை காப்பாற்ற முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சபிபுதீனையும் ஆற்று வெள்ளம் இழுத்து சென்றது. இதில் அவர் ஆற்றில் மூழ்கினார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சபிபுதீன், அபினாஷ் ஆகிய 2 பேரையும் மீட்க முயன்றனர். இதில் அபினாஷ் மட்டும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சபிபுதீனை மீட்க முடியவில்லை.

நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சபிபுதீன், ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டது தெரியவந்தது. ஆற்றின் ஒரு பகுதியில் கிடந்த அவருடைய உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பனை காப்பாற்ற முயன்ற கல்லூரி மாணவர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story