கோவிலம்பாக்கம் அருகே கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்ற சிறுமி கடத்தல்


கோவிலம்பாக்கம் அருகே கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்ற சிறுமி கடத்தல்
x
தினத்தந்தி 8 Oct 2018 4:45 AM IST (Updated: 8 Oct 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

கோவிலம்பாக்கம் அருகே கிறிஸ்தவ தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்காக பெற்றோருடன் சென்ற 3 வயது சிறுமி கடத்தப்பட்டாள். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டையை சேர்ந்தவர் ஆண்டனி சார்லஸ். இவர், தனியார் செக்கியூரிட்டி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர், தனது மனைவி, மகன் மற்றும் 3 வயது மகள் பெர்லிள் ஆகியோருடன் நேற்று கோவிலம்பாக்கம் அடுத்த ஈச்சங்காடு அருகே ரேடியல் சாலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு பிரார்த்தனைக்காக சென்றார்.

அனைவரும் ஆலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தபோது, சிறுமி பெர்லிள் மட்டும் ஆலயத்தின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

ஆலயத்தில் பிரார்த்தனை முடிந்ததும் ஆண்டனி சார்லஸ் குடும்பத்துடன் வீட்டுக்கு செல்ல புறப்பட்டார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டு இருந்த பெர்லிளை காணவில்லை. அவள் மாயமாகி இருந்தாள்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆண்டனி சார்லஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் தேவாலயத்தையொட்டிய பகுதிகளில் தேடினர். ஆனால் எங்கேயும் சிறுமியை காணவில்லை.

இதுபற்றி பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்யப்பட்டது. பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின்பேரில் பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜ் தலைமையில் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் ஆலயத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஆலயத்தின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பெர்லிளை பெண் ஒருவர் அழைத்து செல்லும் காட்சி பதிவாகி இருப்பது தெரிந்தது.

கண்காணிப்பு கேமராவில் பதிவான அந்த காட்சிகளை வைத்து சிறுமியை கடத்திச் சென்ற அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story