காலவரையற்ற வேலை நிறுத்தத்தையொட்டி விசைப்படகு பதிவு புத்தகத்தை, கலெக்டரிடம் ஒப்படைத்து மீனவர்கள் போராட்டம்


காலவரையற்ற வேலை நிறுத்தத்தையொட்டி விசைப்படகு பதிவு புத்தகத்தை, கலெக்டரிடம் ஒப்படைத்து மீனவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2018 3:45 AM IST (Updated: 8 Oct 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

காலவரையற்ற வேலை நிறுத்தத்தையொட்டி தஞ்சையில் மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) விசைப்படகு பதிவு புத்தகத்தை கலெக்டரிடம் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் டீசல் விலையை குறைக்கக்கோரி கடந்த 3-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 5-வது நாளாக வேலை நிறுத்தம் நீடித்தது. வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி தஞ்சையில் இன்று (திங்கட்கிழமை) மீனவர்கள் தங்களுடைய விசைப்படகின் பதிவு புத்தகத்தை கலெக்டரிடம் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதுபற்றி விசைப்படகு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜூதீன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடலில் மீன் வளம் குறைந்து வருவாய் இன்றி விசைப்படகுகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில் டீசல் விலை விஷம்போல் ஏறி வருகிறது.

இதன் காரணமாக மீன்பிடி தொழிலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விசைப்படகுகளுக்கு உற்பத்தி விலைக்கே டீசல் வழங்க வேண்டும். டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்த போராட்டத்தை அரசோ, மீன்வளத்துறையோ கண்டுகொள்ளவில்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தஞ்சை பனகல் கட்டிடம் அருகே இன்று விசைப்படகு மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டரை சந்தித்து விசைப்படகு பதிவு புத்தகங்களை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story