வத்தலக்குண்டு அருகே கன்னிமார் கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு; கிராம மக்கள் போராட்டம்


வத்தலக்குண்டு அருகே கன்னிமார் கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு; கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Oct 2018 4:15 AM IST (Updated: 8 Oct 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

வத்தலக்குண்டு அருகே கன்னிமார் கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வத்தலக்குண்டு,

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சின்னுப்பட்டி மருதாநதி பகுதியில் பழமையான ஆலமரம் ஒன்று இருந்தது. அதன் அடியில் கன்னிமார் கோவில் உள்ளது. இங்கு ஐம்பொன்னால் ஆன கன்னிமார், முனியப்பன் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மரம் திடீரென சாய்ந்து விழுந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அந்த மரத்தின் ஒரு பகுதியை வெட்டி கடத்தி சென்றனர். மேலும் ஐம்பொன்னால் ஆன முனியப்பன், கன்னிமார் சிலைகளையும் திருடி சென்றனர். இதுகுறித்து தகவல் பரவியதையடுத்து நேற்று காலை சின்னுப்பட்டியை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர்.

பின்னர் மரத்தை வெட்டியதுடன், சிலைகளை கடத்தி சென்ற மர்ம நபர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் பொதுமக்களை சமரசம் செய்தார். பின்னர் முதலில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது என்றும், நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் வத்தலக்குண்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், பழமையான மரத்தை மர்ம நபர்கள் தீ வைத்து சாய்த்துள்ளனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு மரத்தின் ஒரு பகுதியை வெட்டி கடத்தி சென்றுள்ளனர். மேலும் சிலைகளையும் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்காவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.


Next Story