மாணவர்கள் குறைவை காரணம் காட்டி 3 ஆயிரம் அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட வேண்டும்; ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் பேட்டி
மாணவர்கள் குறைவை காரணம் காட்டி 3 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார்.
திண்டுக்கல்,
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று திண்டுக்கல்லில் நடந்தது. இதில், புதிய மாநில தலைவராக செல்லையா, பொதுச்செயலாளராக பேட்ரிக் ரெய்மாண்ட், பொருளாளராக தங்கவேலு உள்ளிட்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டம் என்ற பெயரில் தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு நிதி வழங்கி ஊக்குவிக்கும் முறையை கைவிட வேண்டும். அந்த நிதியை அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்புக்கு செலவிட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் பணி நிரவலை முழுமையாக கைவிட்டு ஏற்கனவே இருந்த 1:20 என்ற ஆசிரியர், மாணவர் விகிதத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் மாணவர்கள் குறைவை காரணம் காட்டி 3 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை உடனடியாக கைவிட வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பள்ளிகல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, கள்ளர் சீரமைப்பு துறை ஆகியவற்றை ஒன்றாக இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.