பாளையங்கோட்டையில் 4 வயது மகளை அடித்து சித்ரவதை செய்த பெண், சரணாலயத்தில் ஒப்படைப்பு


பாளையங்கோட்டையில் 4 வயது மகளை அடித்து சித்ரவதை செய்த பெண், சரணாலயத்தில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 8 Oct 2018 4:00 AM IST (Updated: 8 Oct 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் 4 வயது மகளை அடித்து பெண் சித்ரவதை செய்தார். தாயுடன் செல்லமாட்டேன் என்று கூறியதால் அந்த குழந்தை சரணாலயத்தில் ஒப்படைக்கப்பட்டது.

நெல்லை,

நெல்லை பேட்டையை சேர்ந்தவர் அகமது ரஷித். அவருடைய மகள் ரூபையனா (வயது 34). இவருடைய கணவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் ஜமீனா என்ற பெண் குழந்தை உள்ளது. ரூபையனா தனது குழந்தையுடன் பாளையங்கோட்டை மனகாவலன்பிள்ளை நகரில் வசித்து வந்தார்.

ரூபையனாவின் கணவர் தனது வீட்டை மகள் ஜமீனா பெயருக்கு எழுதி வைத்து உள்ளார். இதனால் தனது குழந்தை ஜமீனா மீது ரூபையனாவிற்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் தனது குழந்தைக்கு மொட்டை போட்டும், அடித்து உதைத்தும் சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த ஜமீனாவை, ரூபையனா அடித்து உதைத்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அந்த குழந்தை அழுதுகொண்டே ரோட்டிற்கு வந்தது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் பாளையங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த குழந்தையை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அந்த குழந்தை தனது தந்தை வெளிநாட்டில் இருப்பதாகவும், தாய் தன்னை அடித்து துன்புறுத்துவதால், தாய் உடன் இருக்கமாட்டேன் என்றும் கூறியது. உடனே போலீசார் அந்த குழந்தைக்கு சமூக நலத்துறை அதிகாரிகள் மூலம் அறிவுரை வழங்கினார். அதன் பிறகும் தாயுடன் செல்லமாட்டேன் என்று கூறியதால் அந்த குழந்தையை நெல்லை சரணாலயத்தில் ஒப்படைத்தனர். மேலும் பெற்ற குழந்தையை சித்ரவதை செய்ததாக ரூபையனாவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

Next Story