வெள்ளப்பெருக்கு குறைந்தது: குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி


வெள்ளப்பெருக்கு குறைந்தது: குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி
x
தினத்தந்தி 8 Oct 2018 3:45 AM IST (Updated: 8 Oct 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

நெல்லை,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் நெல்லை மாவட்ட அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குற்றாலம் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் விழுந்ததால், சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது.

இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் குற்றாலத்தில் நேற்று காலை முதல் மழை இல்லை. இதனால் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது.

காலை 9 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் அருவியில் ஓரமாக நின்று குளிக்க வேண்டும் எனவும், வேகமாக தண்ணீர் விழும் பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. வெளியூரில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் ஓரமாக நின்று குளித்தனர். இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் அங்கு குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். ஆனால் தலையணையை சுற்றி பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.


Next Story