திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர்கள் ஆர்வம்


திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர்கள் ஆர்வம்
x

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர்கள் ஆர்வம் காட்டினர்.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருநகர், ஹார்விப்பட்டி மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 38 ஊராட்சி பகுதியிலும் 3–வது கட்டமாக நேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 18 வயது நிரம்பிய இளைஞர்கள் பலர் போட்டி போட்டு புதிய வாக்காளராக சேர்வதில் ஆர்வம் காட்டினார்கள். இதேபோல் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்வதிலும், புதிதாக பெயர் சேர்த்தலிலும் பலர் ஆர்வம் காட்டினார்கள். மேலும் வாக்காளர் படிவத்தில் முகவரி மற்றும் பெயரில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வது குறித்து விண்ணப்பம் அளித்தனர்.

மேலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி திருப்பரங்குன்றம் தொகுதிக்குள் குடியிருந்து வருபவர்கள் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு ஏற்றவாறு மாற்று தொகுதியில் இருந்து தங்களது பெயரை நீக்கியதோடு, இந்த தொகுதிக்குள் பெயரை சேர்ப்பதிலும் முனைப்பு காட்டினர்.

திருப்பரங்குன்றம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்கை முகாமை மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பார்வையிட்டார். மேலும் அவர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரடியாக சென்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாமை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய துணை செயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், முன்னாள் கவுன்சிலர் அக்பர் அலி, அவைத்தலைவர் ராசு, பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், இலக்கிய அணி பகுதி செயலாளர் கவிஞர் மோகன்தாஸ், வட்ட செயலாளர்கள் பொன்முருகன், திருநகர் பாலமுருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story