கள்ளக்காதலி வீட்டில் சிக்கன் வறுவல் கடைக்காரர் மர்ம சாவு கொலையா? போலீசார் விசாரணை


கள்ளக்காதலி வீட்டில் சிக்கன் வறுவல் கடைக்காரர் மர்ம சாவு கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 8 Oct 2018 4:30 AM IST (Updated: 8 Oct 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிமடம் அருகே கள்ளக்காதலி வீட்டில் சிக்கன் வறுவல் கடைக்காரர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரியதத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 41). இவர் ஆண்டிமடம் பகுதியில் சிக்கன் வறுவல் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி கவிதா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. தற்போது கலியபெருமாள் தனது மனைவி கவிதா மற்றும் மகனுடன் விளந்தை புது தேவாங்கர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவருக்கும் திருமணமாகி 2குழந்தை களுடன் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்த பழக்கம் நாளடைவில் கள்ள தொடர்பாக மாறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கலியபெருமாள் மனைவி கவிதா ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கவிதா அரியலூரில் உள்ள தனது சகோதரன் வீட்டிற்கு சென்று விட்டார். இரவில் கவிதா தனது கணவர் கலியபெருமாளிடம் செல்போனில் பேசியுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை கலியபெருமாள் கள்ளக்காதலி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவலறிந்த ஆண்டிமடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலியபெருமாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவிதா தனது கணவர் கலியபெருமாள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியபெருமாள் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கலியபெருமாளுடன் கள்ள தொடர்பு வைத்திருந்தாக கூறப்படும் பெண்ணிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story