தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்
தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவர்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார்.
வில்லியனூர்,
கவர்னர் கிரண்பெடி நேற்றுக் காலை வில்லியனூரை அடுத்த அகரத்தில் உள்ள லட்சுமி நாராயணா மருத்துவக்கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தார். கல்லூரி நிர்வாகிகளிடம் மழை நீரை சேகரிக்க எவ்வளவு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன, மருத்துவக்கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், மறு சுழற்சி செய்யப்படுகிறதா? கல்லூரி வளாகத்தில் எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
அதற்கு கல்லூரி நிர்வாகிகள், ‘‘மருத்துவக்கல்லூரி வளாகத்தில் சுமார் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும், மழைநீரை சேமிக்க 20 தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்’’ தெரிவித்தனர். மேலும் கழிவுநீரை சுத்திகரித்து, தோட்டங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தனர்.
பின்னர் கவர்னர் கிரண்பெடி கல்லூரி வளாகத்தில் மேலும் 100 மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும்படியும், 1 லட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அந்த பணிகளை முடித்துவிட்டு தனக்கு தகவல் தெரிவிக்கும்படியும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவர்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கவர்னர் கிரண்பெடி கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை பார்வையிட்டார். அப்போது பல்கலைக்கழக என்ஜினீயர்களிடம், ‘‘இங்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் மழை நீரை சேகரித்து, நீர் ஆதாரங்களை பெருக்க வேண்டும்; அதற்காக மேலும் கூடுதலாக மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்க வேண்டும்’’ என்றும் வலியுறுத்தினார்.
பல்கலைக்கழகத்தில் கவர்னர் ஆய்வு செய்தபோது துணைவேந்தர் குர்மீத்சிங் மற்றும் பல்கலைக்கழக என்ஜினீயர்கள் உடனிருந்தனர்.