கோட்டைப்பட்டினம், திருவரங்குளத்தில் பலத்த மழை மின்னல் தாக்கி பசுமாடு சாவு


கோட்டைப்பட்டினம், திருவரங்குளத்தில் பலத்த மழை மின்னல் தாக்கி பசுமாடு சாவு
x
தினத்தந்தி 8 Oct 2018 4:15 AM IST (Updated: 8 Oct 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

கோட்டைப்பட்டினம், திருவரங்குளத்தில் பலத்த மழைபெய்தது. மேலும் மின்னல் தாக்கியதில் பசுமாடு ஒன்று பரிதாபமாக இறந்தது.

கோட்டைப்பட்டினம்,

கோட்டைப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் இப்பகுதி விவசாயிகள் ஆற்றுப்பாசனம் இல்லாததால் மழையை மட்டுமே நம்பி உள்ளனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் தங்கள் வயலை உழுது விதை விதைத்து மழைக்காக காத்திருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோட்டைப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள மீமிசல், கரகாத்திக்கோட்டை, அம்பலவானேந்தல் ஆகிய பகுதிகளில் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கண்மாய், நீர்நிலைகள் மழைநீரால் நிரம்பியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த மழையால் கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

இதேபோல திருவரங்குளம் அருகே உள்ள தோப்புக்கொல்லை, மேட்டுப்பட்டி, சீனிவாசநகர், திருநகர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்து நின்றது. இதில் தோப்புக்கொல்லையை சேர்ந்த செல்லையா என்பவர் தனக்கு சொந்தமான பசுமாட்டை அவரது வீட்டின் அருகே தொழுவத்தில் கட்டியிருந்தார். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் அந்த பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இதைக்கண்ட செல்லையாவின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

ஆதனக்கோட்டை-12, பெருங்களூர்-21, புதுக்கோட்டை-58, ஆலங்குடி-26.40, கந்தர்வகோட்டை-15, கறம்பக்குடி-19.60, மழையூர்-35, கீழாநிலை-21.60, திருமயம்-36.80, அரிமளம்-23.80, அறந்தாங்கி-7.80, ஆயிங்குடி-18.20, நாகுடி-20.20, மீமிசல்-126.80, ஆவுடையார்கோவில்-22.20, மணமேல்குடி-38, கட்டுமாவடி-45, இலுப்பூர்-8, குடுமியான்மலை-69, அன்னவாசல்-10, விராலிமலை-3.20, கீரனூர்-4.20, பொன்னமராவதி-58.80, காரையூர்-49. இதில் அதிகபட்சமாக மீமிசலில் 126.80 மில்லி மீட்டர் மழையும், குறைந்த பட்சமாக விராலிமலையில் 3.20 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

Next Story