புகளூரில் ரூ.400 கோடியில் கதவணை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்


புகளூரில் ரூ.400 கோடியில் கதவணை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 8 Oct 2018 4:15 AM IST (Updated: 8 Oct 2018 2:20 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் விவசாயிகளின் நலனை கருதி புகளூரில் ரூ.400 கோடியில் கதவணை அமைக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

கரூர்,

கரூர் அருகே வாங்கல் பகுதியிலுள்ள ஒரு மண்டபத்தில் பாப்புலர் முதலியார் வாய்க்காலை விரிவாக்கம் செய்வது குறித்து விவசாயிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, அந்த வாய்க்காலை தூர்வாரி விரிவாக்கம் செய்யும் பணிக்காக ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் சொந்த நிதியை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

திருப்பூர் சாயக்கழிவுகள் ஆற்றில் கலந்து வருவதால் கரூர் மாவட்டத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சாயக்கழிவு ஆற்றில் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரூர், வாங்கல் பகுதியிலுள்ள 10 ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சினை இருக்கிறது. இதில் 5 ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்க ரூ.6 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே புகளூரில் ரூ.400 கோடியில் கதவணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சிலரின் சுயலாபத்திற்காக கரூரில் ரிங்ரோடு பாதை வடிவமைக்கப்பட்டது. இப்போது பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல் அந்த சாலை மாற்றி வடிவமைக்கப்படுகிறது. விரைவில் இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்படும். கரூர் அருகேயுள்ள நெரூரை திருச்சியுடன் இணைக்கும் நெரூர்- உன்னியூர் பாலம் சர்வே பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் புகளூர்-பாப்புலர் முதலியார் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் நடராஜன், செயலாளர் கனகராஜ், பொருளாளர் ஜெகநாதன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story