குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்


குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு: பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x
தினத்தந்தி 7 Oct 2018 10:30 PM GMT (Updated: 7 Oct 2018 9:18 PM GMT)

குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதையொட்டி பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை நீடித்து வருகிறது. இதைத் தொடர்ந்து அணைகள் மற்றும் குளங்களில் போதுமான தண்ணீர் இருக்கின்றன.

இதற்கிடையே குமரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அனைத்து படகுகளும் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர். பல்வேறு இடங்களில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. அதாவது நாகர்கோவில், கன்னியாகுமரி, கொட்டாரம், ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் ஆகிய பகுதிகளில் பலத்த மழையும், மேற்கு மாவட்ட பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளில் லேசான மழையும் பெய்தது.

நாகர்கோவிலில் நேற்று காலையில் இருந்தே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் 11.45 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசாக பெய்து கொண்டிருந்த மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக மாறியது. இந்த மழை சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது. மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

நாகர்கோவில்- 12, பூதப்பாண்டி- 1.2, சுருளோடு- 1, கன்னிமார்- 7.4, ஆரல்வாய்மொழி- 8.8, பாலமோர்- 2.4, மயிலாடி- 23, கொட்டாரம்- 27.6, இரணியல்- 19.2, ஆணைகிடங்கு- 7, குளச்சல்- 4, குருந்தன்கோடு- 13.4, அடையாமடை- 5, கோழிப்போர்விளை- 19, முள்ளங்கினாவிளை- 6, புத்தன்அணை- 1.8, திற்பரப்பு- 5.4 என்ற அளவில் மழை பெய்திருந்தது.

இதே போல அணை பகுதிகளில் பேச்சிப்பாறை- 5, பெருஞ்சாணி- 1, சிற்றார் 1- 4.6, சிற்றார் 2- 7.2, மாம்பழத்துறையாறு- 20 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 406 கனஅடி தண்ணீர் வந்தது. இதே போல பெருஞ்சாணி அணைக்கு 199 கனஅடியும், சிற்றார் 1 அணைக்கு 93 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு 135 கனஅடி வீதமும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அதே சமயம் கடந்த சில நாட்களாக பேச்சிப்பாறை அணையில் இருந்து 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நேற்று நிறுத்தப்பட்டது.

நாகர்கோவிலில் மழை காரணமாக பல்வேறு சாலைகள் சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக கட்டபொம்மன் சந்திப்பில் இருந்து ஒழுகினசேரி செல்லும் அவ்வை சண்முகம் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மழை பெய்திருப்பதால் சாலை சேதமடைந்து மிகவும் மோசமாக காணப்படுகிறது. குண்டும்-குழியுமாகவும், சேறும்-சகதியுமாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் செல்ல வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மேலும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு செல்லும் சாலையின் நிலையும் மிகவும் பரிதாபமாக காணப்படுகிறது. எனவே சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story