அரூரில் ஆர்.முத்துக்கவுண்டரின் நூற்றாண்டு விழா 3 அமைச்சர்கள் பங்கேற்பு


அரூரில் ஆர்.முத்துக்கவுண்டரின் நூற்றாண்டு விழா 3 அமைச்சர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 8 Oct 2018 4:15 AM IST (Updated: 8 Oct 2018 2:54 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டம் அரூரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.முத்துக்கவுண்டரின் நூற்றாண்டு விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரூர்,

தர்மபுரி மாவட்டம், அரூரில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரூர் ஆர்.முத்துக்கவுண்டரின் நூற்றாண்டு விழா, தமிழ்நாடு காவிரி நீர்பாசன விளைபொருள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க துணைத் தலைவர் ராஜாராம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி வரவேற்றார். முன்னாள் அமைச்சர் பொன்னையன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குப்புசாமி, பால் உற்பத்தியாளர்கள் நல சங்க தலைவர் செங்கோட்டுவேல், சிலம்பொலி செல்லப்பனார், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி பெருமாள், கரும்பு உற்பத்தியாளர்கள் சம்மேளன தலைவர் எம்பாவை. யோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், முத்துக்கவுண்டரின் வாழ்க்கை வரலாறு நூலினை வெளியிட்டு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முத்துக்கவுண்டர் வாழ்நாள் முழுவதும், விவசாயிகளின் நலனுக்காகவே பாடுபட்டவர் என்றார்.

முத்துக்கவுண்டரின் உருவப்படத்தினை திறந்து வைத்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி பேசியதாவது:- மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் முத்துக்கவுண்டர், அரசு பணியில் இருந்து விலகி, மக்களின் பொது சேவைக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். விவசாயிகளின் நலனுக்காக அதிகம் குரல் கொடுத்தவர்.

இவ்வாறு அவர் பேசினார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:- தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நீர்பாசன திட்டங்கள், கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் உருவாகுவதற்கு முக்கிய பங்காற்றியவர் முத்துக்கவுண்டர். அவர், சிறந்த பேச்சாளராகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தவர். தமது வாழ்க்கையை விவசாயிகளின் நலனுக்காவே அர்ப்பணித்தவர். அவரது முயற்சியால் பாப்பிரெட்டிப்பட்டியில் வாணியாறு நீர்த்தேக்கம், ஊத்தங்கரையில் பாம்பாறு நீர்த்தேக்கம் அமைந்தது. மாவட்டத்தில் புதிய தொழில் நுட்பத்துடன் விவசாய பணிகள் மேம்பாடு அடைய முக்கிய காரணமாக இருந்தவர் முத்துக்கவுண்டர் என்றார்.

தொடர்ந்து விவசாய குடும்பங்களை சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகைகளை பிரேமா முத்துக்கவுண்டர் வழங்கினார். மேலும் மூத்த விவசாயிகள் சங்க தலைவர்களையும், முத்துக்கவுண்டருடன் இணைந்து பணியாற்றியவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

இதில், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன், ஜெம் குழுமத்தின் தலைவர் ஜெம் ஆர்.வீரமணி, பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் பாலசுப்பிரமணியம், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சொல்லேர் உழவன் செல்லமுத்து, கொங்கு வேளாளர் சங்க கூட்டமைப்பின் பொதுச்செயலர் ராஜமாணிக்கம், கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பெஸ்ட் எஸ். ராமசாமி, கமலம் கோவை செழியன், கொங்கு பேரவையின் தலைவர் தேவராசன் ஆகியோர் பேசினர். முத்துக்கவுண்டர் வாழ்க்கை வரலாறு நூலாசிரியர் மணிமேகலை புஷ்பராஜ் நூல் ஏற்புரை நிகழ்த்தினார். முடிவில் அரூர் அம்மன் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முத்துராமசாமி நன்றி கூறினார்.

Next Story