கார்களில் மதுபாட்டில்கள் கடத்திய ருவாண்டா மாணவர்கள் 4 பேர் கைது


கார்களில் மதுபாட்டில்கள் கடத்திய ருவாண்டா மாணவர்கள் 4 பேர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2018 4:45 AM IST (Updated: 8 Oct 2018 4:18 AM IST)
t-max-icont-min-icon

கார்களில் மதுபாட்டில்கள் கடத்திய ருவாண்டா நாட்டை சேர்ந்த 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரம்,

சிதம்பரம் அருகே கார்களில் மதுபாட்டில்கள் கடத்திய ருவாண்டா நாட்டை சேர்ந்த 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலையில் சி.கொத்தங்குடிதோப்பு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் விற்பனை செய்யக்கூடிய மதுபாட்டில்கள் இருந்தன. மேலும் அந்த காரில் வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் இருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

இதனிடையே முத்தையாநகர் பிள்ளையார்கோவில் தெருவில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரிலும் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருந்தன. அதிலும் வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் இருந்தனர். இதையடுத்து அவர்களும் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். 4 பேரிடமும் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், ருவாண்டா நாட்டில் உள்ள கிலாளி பகுதியை சேர்ந்த கலிசலியோ போல்ட் மகன் நிக்கோணியாயுவான்(வயது 27), முக்விஷாஜெரால்டு மகன் முக்விஷாஆலிவர்(28), இமானுவேல் மகன் பராக்காபெட்ரிக்(30), காஷாகாஷாவெனன்ட் மகன் நாடாகிருட்டிமானா அலேக்கிஸ் (30) ஆகியோர் என்பதும், பராக்கா பெட்ரிக், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., ஐ.டி. படித்து வருவதும், மற்ற 3 பேரும் எம்.காம். பிரிவில் தோல்வி அடைந்த பாடத்திற்காக தேர்வு எழுத படித்து வந்ததும், 4 பேரும் சிதம்பரம் மீதிக்குடியில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்ததும் தெரியவந்தது.

போலீசார் நடத்திய தொடர் விசாரணையில் 4 பேரும் சேர்ந்து, புதுச்சேரி மாநிலத்தில் இருந்து காரில் மதுபாட்டில்களை கடத்தி வந்து, வீட்டில் பதுக்கி வைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். வீட்டிலும், புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் விற்பனை செய்யக்கூடிய மதுபாட்டில்கள் இருந் தன. இதனை தொடர்ந்து 2 கார்கள், வீட்டில் இருந்த ரூ.1½ லட்சம் மதிப்புள்ள 288 மதுபாட்டில்கள் மற்றும் 10 லிட்டர் சாராயம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 4 மாணவர்களையும் கைது செய்த போலீசார், சிதம்பரம் 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story