கிரேன் மூலம் அகற்றியபோது ஆகாய நடைபாதை சாலையில் விழுந்தது; பெரும் விபத்து தவிர்ப்பு


கிரேன் மூலம் அகற்றியபோது ஆகாய நடைபாதை சாலையில் விழுந்தது; பெரும் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 8 Oct 2018 5:06 AM IST (Updated: 8 Oct 2018 5:06 AM IST)
t-max-icont-min-icon

கிரேன் மூலம் அகற்ற முயன்றபோது ஆகாய நடைபாதை சாலையில் விழுந்தது. அப்போது வாகனம் ஏதும் அந்த வழியாக செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மும்பை,

மும்பை சயான் - பன்வெல் நெடுஞ்சாலையில் வாஷி கழிமுக பாலம் அருகில் பொதுமக்கள் சாலையை கடந்து செல்வதற்கு வசதியாக சாலையின் குறுக்கே ஆகாய நடைபாதை ஒன்று இருந்தது.

நேற்று மதியம் அந்த ஆகாய நடைபாதையை தூக்கி அகற்றும் பணிக்காக 2 கிரேன்கள் ஈடுபடுத்தப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென அந்த ஆகாய நடைபாதை உடைந்து கீழே விழுந்தது.

இதன் காரணமாக அதை தாங்கி பிடித்து கொண்டிருந்த கிரேன் எந்திரம் ஒன்றும் தலைகுப்புற கவிழ்ந்தது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் கிரேன் ஆபரேட்டர் உயிர் தப்பினார்.

இந்த சம்பவத்தின் காரணமாக சயான் - பன்வெல் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மும்பை நோக்கி வரும் மார்க்கத்தில் நடந்த இந்த சம்பவத்தின் காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் செல்ல முடியாமல் நின்று கொண்டிருந்தன.

தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் போக்குவரத்து நெரிசல் காரணமாக, வாகனங்களை பன்வெல் செல்லும் மார்க்கத்தில் திருப்பி விட்டனர்.

ஆனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அந்த மார்க்கத்திலும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்தநிலையில், சாலையின் குறுக்கே விழுந்து கிடந்த ஆகாய நடைபாதை இரவு தான் அகற்றப்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து சீரானது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

முன்னதாக இந்த ஆகாய நடைபாதையை அகற்றும் பணி வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்காமல் நடைபெற்றது. அதிர்ஷ்டவசமாக விபத்து நடந்த நேரத்தில் பாலத்தின் கீழ் வாகனங்கள் ஏதும் வரவில்லை. இல்லையெனில் அந்த வாகனங்கள் மீது ஆகாய நடைபாதை விழுந்து பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.


Next Story