காந்தல் புதுநகரில் அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை


காந்தல் புதுநகரில் அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Oct 2018 4:30 AM IST (Updated: 8 Oct 2018 10:06 PM IST)
t-max-icont-min-icon

காந்தல் புதுநகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு, தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். அதன்படி, ஊட்டி காந்தல் புதுநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

புதுநகர் பகுதியில் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் குடியிருப்புகள் அருகே தடுப்புச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. ஆனால், ஒரு இடத்தில் மட்டும் தடுப்புச்சுவர் கட்டாமல் விடப்பட்டு உள்ளது. இதனால் மழை பெய்யும் காலங்களில் மழைநீர் வீட்டுக்குள் புகுகிறது. சாக்கடை கழிவுநீர் செல்வதற்கு உரிய கால்வாய் அமைக்கப்பட வில்லை. அதன் காரணமாக திறந்தவெளியில் சாக்கடை கழிவுநீர் ஓடுவதால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு, சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மேலும் குடியிருப்புகள் அருகே குப்பைகள் அங்கும், இங்கும் குவிந்து கிடக்கின்றன. இதுகுறித்து மனு அளித்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, தடுப்புச்சுவர், சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். மேலும் கழிவுநீர் செல்ல வழி இல்லாததால் தனிநபர் கழிப்பிடம் அமைக்கப்படாமல் உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஊட்டி அருகே கிரண்டப் காலனியை சேர்ந்த பொதுமக்கள் மாற்று இடம் வழங்கக்கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–

கிரண்டப் காலனியில் 21 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இங்கு 20–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். கடந்த 2009–ம் ஆண்டு இந்த பகுதியில் மழை வெள்ள பாதிப்பால் நிலச்சரிவு ஏற்பட்டதில், வீடுகள் இடிந்து விழுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சிலர் உயிரிழந்தனர். அங்குள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. தற்போது ஊட்டியில் மழை பெய்து வருவதால், வீட்டிற்குள் தண்ணீர் ஒழுகுகிறது. பலத்த மழை பெய்தால் வீட்டில் வசிக்கவே அச்சமாக உள்ளது. எனவே, பொதுமக்களை நலனை கருத்தில் கொண்டு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

நீலகிரி மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் மற்றும் அதன் நிர்வாகிகள் அளித்த மனுவில், ஊட்டி நகரின் முக்கிய கால்வாயான கோடப்பமந்து கால்வாய் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. கால்வாயில் மழையின் போது அடித்த வரப்பட்ட மண் படிந்து காணப்படுகிறது. இதனால் கனமழை பெய்தால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மேலும் குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் தேங்கி உள்ளது. எனவே, கோடப்பமந்து கால்வாயில் குப்பைகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 181 மனுக்கள் பெறப்பட்டன. அண்ணல் காந்தியடிகளின் 150–வது பிறந்தநாளையொட்டி முத்தோரை லீசில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஓய்வூதியம் பெறுவதற்காக வழங்கப்பட்ட கோரிக்கை மனு உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, முத்தோரை பகுதியை சேர்ந்த கருப்பாத்தாள், முருகன் ஆகிய இரண்டு பேருக்கு முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ.ஆயிரம் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. கூட்டத்தில் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பாஸ்கரன், உதவி ஆணையர் (கலால்) ஜெய்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story