மாற்று பஸ் இயக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்
செஞ்சியில் மாற்று பஸ் இயக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செஞ்சி,
செஞ்சி பகுதி கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் திண்டிவனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இவர்கள் தினந்தோறும் கிராமப்புறங்களில் இருந்து அரசு பஸ் மற்றும் மினிபஸ்கள் மூலம் செஞ்சி பேருந்து நிலையத்துக்கு வந்து, காலை 7.45 மணிக்கு திண்டிவனம் வழியாக சென்னை செல்லும் அரசு பஸ்சில் ஏறி கல்லூரிக்கு செல்வது வழக்கம்.
அந்த வகையில் நேற்று காலை மாணவ-மாணவிகள் திண்டிவனம் கல்லூரிக்கு செல்ல பஸ் ஏறுவதற்காக செஞ்சி பேருந்து நிலையத்துக்கு வந்தனர். காலை 7.45 மணிக்கு திண்டிவனம் வழியாக சென்னை செல்லும் அந்த அரசு பஸ் 8 மணி ஆகியும் பேருந்து நிலையத்துக்கு வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் பேருந்து நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் சரியான நேரத்துக்கு பஸ்சை இயக்கக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பியபடி பேருந்து நிலைய நுழைவு வாயிலை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி போலீசார் மற்றும் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போக்குவரத்துக்கழக அதிகாரிகள் வழக்கமாக காலை 7.45 மணிக்கு இயக்கப்படும் அரசு பஸ் என்ஜின் பழுது காரணமாக இயக்கப்படவில்லை என்றும், எனவே வேறு ஏதேனும் பஸ்களில் ஏறி கல்லூரிக்கு செல்லுமாறு மாணவர்களிடம் கூறினார்கள். அதற்கு மாணவர்கள் வேறு பஸ்களில் ஏறி சென்றால் சரியான நேரத்துக்கு கல்லூரிக்கு செல்ல முடியாது என்பதால் செஞ்சியில் இருந்து திண்டிவனம் அரசு கல்லூரிக்கு மாற்று பஸ் இயக்கவேண்டும் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் பணிமனையில் இருந்து மாற்று பஸ்சை வரவழைத்தனர். இதையடுத்து மாணவ- மாணவிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு மாற்று பஸ்சில் ஏறி திண்டிவனம் கல்லூரிக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story