நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை: மின்னல் தாக்கி பெண் பலி 5 வீடுகள் இடிந்து சேதம்
நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. திருவேங்கடம் அருகே மின்னல் தாக்கி பெண் பலியானார்.
நெல்லை,
தென்தமிழகத்தின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழுகிறது.
சங்கரன்கோவில், அம்பை, கடையம், புளியங்குடி வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் சங்கரன்கோவில் அருகே உள்ள ஜமீன் இலந்தைகுளத்தை சேர்ந்த உடையார் மகன் செல்லத்துரை (வயது 35) என்பவருடைய வீட்டின் மாடி அறை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் வீட்டின் அருகே இருந்த மின்கம்பமும் சேதமடைந்தது. வீட்டின் மாடி அறையில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
அம்பை மேலப்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்த சைலப்பன் மகன் முத்துக்குமார் (35) என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீடு மழையால் இடிந்து விழுந்து சேதமடைந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல் அம்பை பண்ணை சங்கரய்யர் நகரில் ஓடு தயாரிக்கும் ஆலையின் காம்பவுண்டு சுவர் இடிந்து, பக்கத்தில் வசிக்கும் இளங்கோ என்பவரது வீட்டின் காம்பவுண்டு சுவர் மீது விழுந்தது. இதில் அவர் வீட்டுக்கு வந்திருந்த சங்கர் தெருவை சேர்ந்த ஐசக் (38) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
ஆலங்குளம் அருகே அடைக்கலபட்டினம் வடக்கு தெருவில் உள்ள ஜெபக்குமார் என்பவருடைய வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மின்னல் தாக்கி பெண் பலி
மேலும் அம்பை தீயணைப்பு நிலைய கட்டிடத்தை மின்னல் தாக்கியதில், மின்கம்பிகளில் தீப்பிடித்து மின் விசிறிகள், மின்விளக்குகள், டி.வி., டெலிபோன் இணைப்புகள் சேதம் அடைந்தன.
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணிபுரம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாயாண்டி (40) என்பவருடைய வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. மாயாண்டியும், அவருடைய மனைவி சுப்புலட்சுமியும் வீட்டின் மற்றொரு அறையில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருவேங்கடம் அருகே உள்ள சங்குபட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (60), விவசாயி. அவருடைய மனைவி சுப்புத்தாய் (55). இவர்கள் இருவரும் ஊருக்கு அருகே உள்ள தங்களுடைய தோட்டத்தில் நேற்று வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் இருவரும் வீட்டுக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது சுப்புத்தாய் மீது திடீரென்று மின்னல் தாக்கியது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்த பொன்னுச்சாமி கதறி அழுதார். கணவன் கண்முன்னே மனைவி மின்னல் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 631 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 106.65 அடியாக இருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 50.62 அடியாக உள்ளது.
செங்கோட்டை, குற்றாலம், கடையநல்லூர் பகுதியில் பெய்த மழையால், 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 63.29 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 450 கனஅடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதேபோல் குண்டாறு அணை நிரம்பியதால், அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
அம்பை, ஆய்குடி, மணிமுத்தாறு, பாபநாசம், நாங்குநேரி, ராதாபுரம், பரப்பாடி, மூலைக் கரைப்பட்டி, வடக்கு விஜய நாராயணம்,தென்காசி, சங்கரன்கோவில் பகுதியில் நேற்று மதியம் மழை பெய்தது. நெல்லையில் நேற்று காலையில் இருந்து மதியம் 3 மணி வரை வெயில் அடித்தது. அதன் பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 3 மணிக்கு லேசான சாரல் தூறியது. அதன் பிறகு வெயில் அடித்தது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்) வருமாறு:-
கருப்பாநதி-43, ஆய்குடி-28, சிவகிரி-24, அடவிநயினார்-15, பாபநாசம்-12, குண்டாறு-12, மணிமுத்தாறு-6, ராமநதி-5, தென்காசி-4, சங்கரன்கோவில்-3, கடனாநதி-3, அம்பை-2.60, சேர்வாலாறு-2, ராதாபுரம்-1.30.
Related Tags :
Next Story