தூத்துக்குடி கடலில் மாயமானவர்கள்: சிறிய ரக விமானங்கள் மூலம் 19 மீனவர்களை தேடும் பணி தீவிரம் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்
தூத்துக்குடி கடலில் மீன்பிடிக்க சென்று மாயமான 19 மீனவர்களை கடலோர காவல்படையின் 2 சிறிய ரக விமானம் மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
தூத்துக்குடி,
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து அனைத்து மீன்பிடி படகுகளையும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான மீன்பிடி படகுகள் கரைக்கு திரும்பின.
அதே நேரத்தில் தருவைகுளத்தில் இருந்து கடந்த 1-ந்தேதி ரவி, பவுல்ராஜ் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் 19 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்களை மட்டும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, மாயமான அந்த மீனவர்களின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கடலோர காவல்படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் கடலோர காவல்படைக்கு சொந்தமான வைபவ், அபிராஜ் ஆகிய 2 ரோந்து கப்பல்கள் மூலம் தேடும் பணி நடந்தது. அதேபோன்று கடலோர காவல்படைக்கு சொந்தமான டோனியர் வகை சிறிய விமானம் மூலமும் தேடும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் கரை திரும்பாமல் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த மீனவர்களை கடலோர காவல்படையினர் ரோந்து கப்பலில் இருந்தும், சிறிய ரக விமானத்தில் தாழ்வாக பறந்து சென்றும் மைக் மூலம் நேற்று எச்சரிக்கை விடுத்தனர். உடனடியாக அருகில் உள்ள துறைமுகத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்கின்றனர். அவர்கள் சுமார் 100 கடல் மைல் தொலைவு வரைக்கும் செல்வது வழக்கம். அதே போல் கடந்த 1-ந்தேதி தூத்துக்குடியில் இருந்து பல படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு புறப்பட்டு சென்றன.
புயல் எச்சரிக்கை வந்ததும் அனைத்து படகுகளுக்கும் உடனடியாக தகவல் தெரிவித்து திரும்பி வருமாறு அறிவுரை வழங்கப்பட்டன. தருவைகுளத்தை சேர்ந்த 2 படகுகளை தவிர மற்ற அனைத்து படகுகளும் திரும்பிவிட்டன. கரை திரும்பாத அந்த 2 படகுகளில் 19 மீனவர்கள் உள்ளனர். அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ற விவரம் இதுவரை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த 2 நாட்களாக இந்திய கடலோர காவல்படையினரின் 2 டோனியர் வகை சிறிய விமான மூலம் தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கும்.
மேலும் மாலத்தீவு, ஓமன் நாட்டில் அவர்கள் கரை ஒதுங்கி உள்ளனரா? என கண்டறிய அந்த நாட்டு கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளோம். அந்த 19 மீனவர்களும் கண்டிப்பாக திரும்பி வருவார்கள் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story