‘வாட்ஸ்–அப்பில் வைரலாக பரவிய குற்றச்சாட்டு: அரசு பஸ் டிரைவர் பணியிடை நீக்கம்


‘வாட்ஸ்–அப்பில் வைரலாக பரவிய குற்றச்சாட்டு: அரசு பஸ் டிரைவர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 8 Oct 2018 11:00 PM GMT (Updated: 8 Oct 2018 6:26 PM GMT)

வாட்ஸ்–அப்‘பில் வைரலாக பரவிய குற்றச்சாட்டு தொடர்பாக அரசு பஸ் டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பழனி,

பழனி ரெயில்வே பீடர் சாலையை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 39). இவர், பழனி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 4–ந்தேதி இவர், திருச்சியில் இருந்து திண்டுக்கல் வழியாக பழனிக்கு அரசு பஸ்சை இயக்கி வந்தார்.

அப்போது அந்த பஸ்சில் டிரைவர் இருக்கையின் அருகில் உள்ள கதவில் பொருத்தப்பட்டுள்ள ‘‌ஷட்டர்’ முழுமையாக மூட முடியவில்லை. இதனால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும் அரசு பஸ்களில் பிரேக்கும் முறையாக வேலை செய்வதில்லை என்று டிரைவர் விஜயகுமார், பயணிகளிடம் தெரிவித்துள்ளார். அதை பயணிகள் வீடியோ எடுத்து ‘வாட்ஸ்–அப்பில்’ பரவ விட்டனர்.

‘வாட்ஸ்–அப்‘பில் வைரலாக பரவிய இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பழனி அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள், அந்த பஸ்சில் சேதமான ‌ஷட்டரை உடனடியாக சீரமைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, சாலையில் ஓட்டியபடியே பயணிகளிடம் அரசு பஸ்களின் அவலநிலை குறித்து விஜயகுமார் தெரிவித்து அதனை ‘வாட்ஸ்–அப்‘பில் பரவ விட்டது தெரியவந்தது. இதனையடுத்து விஜயகுமாரை, பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் ராஜேஸ்வரன் உத்தரவிட்டார்.

இதற்கிடையே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிரைவர் விஜயகுமார், அதற்கான ஆணையை கையில் வைத்தப்படி பழனியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நான் கடந்த 12 ஆண்டுகளாக அரசு பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறேன். நான் இயக்குகிற பஸ், நல்ல முறையில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். ஏனென்றால் பயணிகளின் பாதுகாப்பு மிக அவசியம். அதேபோல் பஸ்சை இயக்கும் போது செல்போனில் யாருடனும் நான் பேச மாட்டேன்.

ஆனால், உயர் அதிகாரிகள் நான் பஸ்சை இயக்குவது தெரிந்தும் என்னுடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேச முயற்சிப்பார்கள். பயணிகள் பாதுகாப்பை கருதி அதனை நான் தவிர்த்து விடுவேன். கடந்த 4–ந்தேதி கூட, பயண களைப்பால் நான் தூங்கிவிடக்கூடாது என்பதற்காக தான் சக பயணிகளிடம் பேசியபடி பஸ்சை இயக்கினேன். அதனை யாரோ வீடியோ எடுத்து பரவ விட்டுவிட்டனர். அந்த வீடியோவை காரணம் காட்டி என்னை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இது நியாயமற்றது, என்றார்.


Next Story