தொடர் திருட்டை தடுக்க கிராம மக்கள் மனு


தொடர் திருட்டை தடுக்க கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 8 Oct 2018 9:45 PM GMT (Updated: 2018-10-09T00:22:26+05:30)

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தொடர் திருட்டை தடுக்கக்கோரி கிராம மக்கள் திரளாக வந்து மனு கொடுத்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தங்கள் பகுதியில் தொடர் திருட்டுகள், வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதாகவும், பிள்ளை மடரோடு பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் தங்கியுள்ள நபர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், மக்கள் அச்சத்தில் உள்ளதால் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட பொருளாளர் மலைசந்திரன் அளித்த மனுவில், மழைபெய்து வருவதால் விவசாயிகள் பணிகளை தொடங்கியுள்ள நிலையில் களைக்கொல்லி மருந்துகள் தனியார் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க அரசு வேளாண்மை விரிவாக்க மையத்தில் நியாயமான விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

முதுனாள் கிராமத்தில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி உள்ள நிலையில் அதனை வெளியேற்ற சிலர் தடுத்து வருகின்றனர். உடனடியாக விவசாயத்தை காப்பாற்ற தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா காவாகுளம் பகுதியை சேர்ந்த நல்லையா என்பவரின் மனைவி மூக்கம்மாள்(வயது68) என்பவர் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் தனக்கு ஊனமுற்றோர் அடையாள அட்டை வழங்கி, மாதாந்திர உதவித்தொகை வழங்குமாறு கோரி மனு கொடுத்தார்.

இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


Next Story