திருவாடானை அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு


திருவாடானை அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 9 Oct 2018 4:30 AM IST (Updated: 9 Oct 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை அருகே மாஞ்சூர் கிராமத்தில் பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொண்டி,

திருவாடானை அருகே மாஞ்சூரில் அழிந்த நிலையில் உள்ள சிவன் கோவிலில் பிற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த 5 கல்வெட்டுகளை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர். இவை சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவதற்கு நிலம், தங்கம், பொற்காசுகள், நெல் ஆகியவற்றை தானமாக வழங்கிய தகவலை சொல்லும் கி.பி.13–ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டுகள் ஆகும். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு, செயலாளர் ஞானகாளிமுத்து, ஒருங்கிணைப்பாளர் விமல்ராஜ் ஆகியோர் மாஞ்சூரில் மேற்கொண்டிருந்த களஆய்வின் போது அந்த ஊரைச்சேர்ந்த மூர்த்தி என்பவர் சிவன் கோவிலில் கல்வெட்டுகள் இருப்பதாக தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஆய்வுக்குழுவினர் பிற்கால பாண்டியர்களின் 5 கல்வெட்டுகளைக் கண்டுபிடித்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறியதாவது:– இங்கு கண்டு பிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் இவ்வூர் பெயர் அரும்பொற்கூற்றத்தை சேர்ந்த மாஞ்சிலான மான மாணிக்கநல்லூர் எனவும், இக்கோவில் இறைவன் பெயர் திருவரகரீஸ்வரமுடைய நாயனார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாஞ்சில் எனும் ஊர் பெயர் தற்போது மாஞ்சூர் என மாறியுள்ளது. மாஞ்சில் எனும் ஒரு மூலிகை தாவரத்தின் பெயரால் இந்த ஊர் அமைந்துள்ளது. சடைமுடி போன்று காணப்படும் இதன் வேரில் இருந்து நறுமண தைலம் தயாரித்து முற்காலத்தில் பயன்படுத்தியுள்ளனர். இரண்டு கல்வெட்டுகள் முதலாம் மாறவர்மன் குலசேகரன் காலத்தையும், மற்ற இரண்டும் முறையே சடையவர்மன் சீவல்லவன், மாறவர்மன் விக்கிரமபாண்டியன் காலத்தையும் சேர்ந்தவை. ஒரு கல்வெட்டு கோனேரின்மை கொண்டான் எனும் அரசாணை கல்வெட்டு ஆகும்.

சுற்றுச் சுவர்களுடன் கூடிய சிறிய அளவிலான இக்கோவில், கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் என்ற அமைப்பில் இருந்துள்ளது. தற்போது இவை அழிந்த நிலையில் உள்ளன. சோழர் கால அமைப்பில் உள்ள இக்கோவில் கி.பி.1011–ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம். கி.பி.1300–ல் சடையவர்மன் சீவல்லவன் தனது ஒன்பதாம் ஆட்சியாண்டில் இவ்வூரில் தேவதானமாக கொடுத்த இடத்துக்கு கிடைக்கும் கடமை, அந்தராயம், வினியோகம் ஆகிய வரிகளை பெற்று கோவிலில் அமுதுபடி உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்த ஓலை வழங்கியுள்ளார்.

கல்வெட்டுகளில் இந்த ஊரைச்சேர்ந்த தென்னவன் முதலி நாட்டு மூவேந்த வேளான், சோலைஅரசு தில்லைநாயகன், பட்டாலகன் சுந்தர தோளன் ஆன களபாளராயன், பொன்னம்பல கூத்தனான அவனி நாராயண விழுப்பரையன், அரையன் பட்டாலகன் ஆகிய அரசு அதிகாரிகளின் பெயர்கள் உள்ளன. அப்பி வெட்டி, விரால புரளி ஆகிய நிலத்தின் பெயர்களும், பொன் எட்டரை, கழஞ்செய், மஞ்சாடி, மா ஆகிய தங்கத்தின் நிறுத்தல் அளவுகளும் முந்திரிகை, முக்காணி, மாவரை ஆகிய நிலஅளவுகளும் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story