திருப்பத்தூர் அருகே இடத்தகராறில் முதியவர் அடித்துக் கொலை; 6 பேர் கைது


திருப்பத்தூர் அருகே இடத்தகராறில் முதியவர் அடித்துக் கொலை; 6 பேர் கைது
x
தினத்தந்தி 8 Oct 2018 10:30 PM GMT (Updated: 2018-10-09T00:33:12+05:30)

திருப்பத்தூர் அருகே இடத்தகராறில் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது சகோதரர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பூசணிக்களம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா என்ற சின்னக்கருப்பன்(வயது65). இவரது சகோதரர்கள் சேவுகன்(60), அழகு(57). இதில் கருப்பையாவும், சேவுகனும் ஒன்றாகவும், அழகு தனியாகவும் வசித்து வந்துள்ளனர். மேலும் சகோதரர்களுக்கு இடையே இடம் சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கருப்பையா மற்றும் சேவுகன் ஆகியோர் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் வேலி அமைக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த அழகு அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

தகராறின்போது ஆத்திரமடைந்த அழகு அருகில் கிடந்த கடப்பாரையை எடுத்து கருப்பையாவை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா இறந்துபோனார்.

இதுகுறித்து அவரது மகன் லட்சுமணன்(30) நெற்குப்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மற்றும் சிங்கம்புணரியில் தலைமறைவாக இருந்த அழகு(57), இவரது மனைவி ரத்தினம்(50), மகன்கள் பாண்டிமுருகன்(30), கண்ணன்(34), மகள்கள் மகாலட்சுமி(35), லதா(38) ஆகியோரை கைதுசெய்தனர்.

Next Story