தமிழகத்திலேயே முதன்முறையாக இதயம்-நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான தனிப்பிரிவு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கப்பட்டது


தமிழகத்திலேயே முதன்முறையாக இதயம்-நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான தனிப்பிரிவு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கப்பட்டது
x
தினத்தந்தி 9 Oct 2018 4:30 AM IST (Updated: 9 Oct 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்திலேயே முதன்முறையாக இதயம்-நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான தனிப்பிரிவு, சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கப்பட்டது.

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.55 லட்சம் மதிப்பில் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு என பிரத்தியேக அறுவை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு நேற்று முதல் தொடங்கப்பட்டது. தமிழக அரசு ஆஸ்பத்திரிகளிலேயே முதன்முறையாக தொடங்கப்பட்டு உள்ள இச்சிகிச்சை பிரிவை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

நோய்த்தொற்றை தவிர்க்க...

இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த பின்னர், நோய்த்தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. இதனை தவிர்ப்பதற்காக பிரத்தியேக அறுவை அரங்கம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டு இருக்கிறது. இங்கு ரூ.1 கோடி மதிப்பிலான அறுவை சிகிச்சை கருவி அமைக்கப்பட்டு உள்ளது.

சென்னை மருத்துவக்கல்லூரியில் 1957-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இதயம் மற்றும் நுரையீரல் துறை 2018-ம் ஆண்டில் நிறுவனமாக மேம்படுத்தப்பட்டு, சராசரியாக ஒவ்வொரு மாதமும் 250 அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறது. முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை 2009-ல் வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதுவரை 8 இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.

15 ஆயிரம் பயனாளிகள்

இந்த அறுவை சிகிச்சை முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் செய்யப்படுகிறது. அந்தவகையில் கடந்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் 15 ஆயிரம் பயனாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ரூ.28 கோடியை இத்துறை ஈட்டியிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் எட்வின் ஜோ, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ஜெயந்தி, இதய மாற்று மற்றும் நுரையீரல் துறை தலைவர் டாக்டர் மாரியப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story