வியாசர்பாடியில் ரூ.6 லட்சம் செல்போன் திருடிய வழக்கில் வாலிபர் கைது


வியாசர்பாடியில் ரூ.6 லட்சம் செல்போன் திருடிய வழக்கில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 9 Oct 2018 3:30 AM IST (Updated: 9 Oct 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

வியாசர்பாடியில் ரூ.6 லட்சம் மதிப்பிலான செல்போன்களை திருடிய வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பூர், 

சென்னை வியாசர்பாடி, சர்மாநகர், அண்ணா சாலையை சேர்ந்தவர் அருள்பாக்யராஜ் (வயது 40). கொடுங்கையூர் காமராஜர் சாலையில் செல்போன் கடை நடத்தி வந்தார்.

கடந்த மாதம் 18-ந் தேதி இந்த கடையின் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

இதுகுறித்து அருள்பாக்யராஜ் கொடுங்கையூர் போலீசில் புகார் கொடுத்தார். இதுபற்றி விசாரிக்க புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

வாலிபர் பிடிபட்டார்

இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்தபோது, செல்போனை திருடியது கிருஷ்ணகிரியை சேர்ந்த சரவணன் என்பதும், அவர் அமைந்தகரையில் உள்ள போட்டோ ஸ்டுடியோ கடையில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று விசாரித்தபோது, சரவணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலையில் இருந்து நின்றுவிட்டதாக தெரிவித்தனர்.

கடையில் இருந்தவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் சரவணனின் நண்பரான கொடுங்கையூர் எம்.ஆர். நகரைச் சேர்ந்த தமிழ்மணி (27) என்பவரை போலீசார் பிடித்தனர். அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

2 பேருக்கு வலைவீச்சு

அப்போது சரவணன் மற்றும் அவரது நண்பர்களான தமிழ்மணி உள்பட 2 பேரும் சேர்ந்து செல்போன் மற்றும் பணம் திருடியது விசாரணையில் தெரியவந்தது.

சம்பவத்தன்று 3 பேரும் செல்போன் கடை எதிரே உள்ள தியேட்டருக்கு சென்றுள்ளனர். அப்போது கடையில் புதிய செல்போன்கள் இருப்பதை வெளியில் பார்த்த அவர்களுக்கு செல்போனை திருடவேண்டும் என்ற விபரீத ஆசை ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அன்று இரவே திருட்டு சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.

இதனை தொடர்ந்து தமிழ் மணியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான சரவணன் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story