மயிலாடுதுறை பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது : 2 பெண்களுக்கு வலைவீச்சு


மயிலாடுதுறை பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது : 2 பெண்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 Oct 2018 3:15 AM IST (Updated: 9 Oct 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குத்தாலம், 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே எலந்தங்குடி கிராமத்தில் மகிமலையாற்றின் கரையையொட்டி சிலர் சாராயம் விற்பதாக பெரம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சாராயம் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், எலந்தங்குடியை சேர்ந்த முகமதுநிஷார் (வயது37) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக முகமதுநிஷாரின் மனைவி மும்தாஜ்பேகத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல் அசிக்காடு பகுதியில் சாராயம் விற்ற குத்தாலம் அருகே பொன்னூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் மகன் சதீஷ்குமார் (26) என்பவரை குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக சதீஷ்குமாரின் மனைவி ரோஸ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story