மதுரை மாவட்டத்தில் கன மழை: கண்மாயில் கட்டிய மாடுகளை மீட்க சென்ற பெண் மூழ்கி சாவு


மதுரை மாவட்டத்தில் கன மழை: கண்மாயில் கட்டிய மாடுகளை மீட்க சென்ற பெண் மூழ்கி சாவு
x
தினத்தந்தி 9 Oct 2018 4:15 AM IST (Updated: 9 Oct 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடானது. உசிலம்பட்டி அருகே கண்மாய்க்குள் கட்டிப்போட்டிருந்த மாடுகளை மீட்கச் சென்ற பெண் மூழ்கி பலியானார்.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடானது. கண்மாய்கள் நிரம்பின. பலத்த மழை காரணமாக மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை வீதி மற்றும் ஆடி வீதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி கோவிலுக்குள் புகுந்தது. அதனால் சாமி சன்னதி 2–ம் பிரகாரம் உள்ளிட்ட பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்தது. நேற்று மகாளய அமாவாசையையொட்டி தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் பெருமளவில் கோவிலுக்கு வந்தனர்.

அப்போது வடக்குஆடி வீதியில் தர்ப்பணம் கொடுக்கும் இடத்தில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி இருந்தது. எனவே கோவில் நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காக தர்ப்பணம் கொடுக்கும் இடத்தை பழைய கல்யாண மண்டபத்திற்கு மாற்றினர். தேங்கிய மழைநீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றினார்கள்.

உசிலம்பட்டி தாலுகா, செல்லம்பட்டி ஒன்றியம், பானாமூப்பன்பட்டி அருகே உள்ள ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி கலா (வயது 44). மாடுகள் வளர்த்து வந்தார். தங்களது மாடுகளை ஊருக்கு அருகில் உள்ள நீர் இல்லாத கண்மாய்க்குள் கட்டிப்போட்டு வைத்திருப்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு திடீரென்று பெய்த கன மழையை தொடர்ந்து கண்மாயில் கட்டிப்போட்டிருந்த மாடுகளை மேட்டுப் பகுதிக்கு கொண்டு வருவதற்காக ஜெயராஜூம், கலாவும் சென்றுள்ளனர். கலா கணவரிடம் மாட்டை பிடித்து கொடுத்துள்ளார். அவரிடம் இருந்து ஜெயராஜ் மாடுகளை வாங்கி மேட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது தொடர்ந்து மாடுகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கலா மழைநீரில் சிக்கிக் கொண்டார். கண்மாய்க்குள் நாலாபுறமும் பாய்ந்து ஓடி வந்த மழைநீரில் சிக்கி மூழ்கிய கலா பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று கண்மாய்க்குள் தத்தளித்துக் கொண்டிருந்த 5 மாடுகளை மீட்டனர். பின்னர் நீரில் மூழ்கி பலியான கலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினமும் பலத்த மழை பெய்தது. இடி மின்னலுடன் மழை பெய்ததால் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மழைநீர் கடத்த மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை முதல் மாவட்டத்தில் மழை நின்று வெயில் அடித்தது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:– கடலாடி–3.6, கமுதி– 6.6, ராமநாதபுரம்–42, பள்ளமோர்குளம்–12.5, பாம்பன்–12.3, ஆர்.எஸ்.மங்கலம்–46, வாலிநோக்கம்–60.6, பரமக்குடி–77.4, திருவாடானை–0.2, தொண்டி–0.3, முதுகுளத்தூர்–4.1, மண்டபம்–4.6, ராமேசுவரம்–86.2, தங்கச்சிமடம்–30.2.

விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ராஜபாளையம், வத்திராயிருப்பு பகுதிகளிலும் கிழக்குப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்குள் மழைநீர் புகுந்தது. மற்ற இடங்களில் மிதமான மழை பெய்தது. விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் லேசான மழையே பெய்தது. நேற்று பகல் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் லேசான மழையே பெய்தது. இதனால் விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

நேற்று காலை 8 மணிவரை வரையிலான 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:–

அருப்புக்கோட்டை 17, சாத்தூர் 2, ஸ்ரீவில்லிபுத்தூர் 13, சிவகாசி 14.9, விருதுநகர் 6, திருச்சுழி 20, ராஜபாளையம் 33, காரியாபட்டி 33.2 வத்திராயிருப்பு 70.8, பிளவக்கல் 5, வெம்பக்கோட்டை 12.5, கோவிலாங்குளம் 38.2.


Next Story