வழக்குகளின் நிலையை அறிய தொடுதிரை கணினி வசதி; தலைமை நீதிபதி தனபால் தொடங்கிவைத்தார்
புதுவை கோர்ட்டு வளாகத்தில் வழக்குகளின் நிலையை அறிய தொடுதிரை கணினி வசதியை தலைமை நீதிபதி தனபால் தொடங்கிவைத்தார்.
புதுச்சேரி,
சுப்ரீம் கோர்ட்டின் ஆணைப்படியும், சென்னை ஐகோர்ட்டின் வழிகாட்டுதலின்படியும் புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குகளின் நிலை மற்றும் இதர தகவல்களை பொதுமக்கள் தாமாகவே அறியும்வண்ணம் தொடுதிரை கணினி அமைக்கப்பட்டுள்ளது.
அதன் செயல்பாட்டினை புதுவை தலைமை நீதிபதி தனபால் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் புதுவை சட்டத்துறை செயலாளர் ஜூலியட் புஷ்பா, புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் சோபனாதேவி, முதன்மை சார்பு நீதிபதி எழிலரசி, வக்கீல் சங்க தலைவர் திருக்கண்ண செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த தொடுதிரை கணினி மூலமாக பொதுமக்கள் வழக்குகளின் நிலை மற்றும் வழக்கு சம்பந்தப்பட்ட தகவல்களையும், நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் முடிவுபெற்ற வழக்குகளின் நிலையையும் அறியலாம். அதேபோல் முடிவுபெற்ற வழக்குகளின் தீர்ப்புகளையும் காணலாம்.
அதுமட்டுமில்லாமல் நீதிமன்றங்களில் குறிப்பிட்ட நாளில் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ள சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளின் பட்டியலையும் காணலாம். இந்த சேவைகள் வழக்காளிகள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ளது.