பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு: மத்திய அரசை வலியுறுத்துவோம் - சாமிநாதன் எம்.எல்.ஏ. பேட்டி
மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்துவோம் என சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
புதுச்சேரி,
பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. இந்த நிலையில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50 குறைத்துள்ளார். மேலும் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் அந்த மாநில அரசுகள் லிட்டருக்கு ரூ.2.50 குறைத்துள்ளன.
இதனால் நாட்டில் 15–க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைந்துள்ளது.
ஆனால் புதுவையில் மத்திய அரசின் வரி குறைப்பை கூட அமல் செய்யாமல் இருந்தனர். இது குறித்து நாங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் செய்ததன்பேரில் கலால்துறை தற்போது விலையை குறைத்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் கிராமப்புற பகுதிகளில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே சேதமான பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் மழை நிவாரணமாக வழங்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் இலவச அரிசியை வழங்க வேண்டும். பொதுப்பணித்துறையும், உள்ளாட்சித்துறையும் மழைக்கான திட்டமிடல் ஏதும் செய்யவில்லை. மழையை எதிர்கொள்ள சரியாக திட்டமிட வேண்டும்.
முதல்–அமைச்சர் நாராயணசாமியின் நெல்லித்தோப்பு தொகுதியிலேயே மழை நிவாரணப் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. அனைத்து தொகுதிகளிலும் நிவாரண பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவும், ஜிப்மரில் புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கவும் சட்ட திருத்தம் கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்துவோம்.
மக்கள் நல திட்டங்களை முடக்கிய மாநில அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் 10 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.