பவானி அருகே பட்டப்பகலில் துணிகரம் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
பவானி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துவிட்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்ற மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பவானி,
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் அந்த பகுதியில் உள்ள லாரி அலுவலகத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி சித்ரா (வயது 32). இவருடைய தாய் காளியம்மாள். இவர் ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன்பாளையம் அருகே உள்ள மணக்காட்டூர் பகுதியில் வசித்து வருகிறார்.
தாயை பார்ப்பதற்காக சித்ரா கொளத்தூரில் இருந்து பஸ்சில் நேற்று பகல் 11.30 மணி அளவில் காலிங்கராயன்பாளையம் வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து தாய் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் மர்மநபர்கள் 2 பேர் வந்து கொண்டிருந்தார்கள்.
திடீரென அந்த நபர்கள் அவரது முன்பு மோட்டார்சைக்கிளை குறுக்காக நிறுத்தி மேற்கொண்டு அவரை செல்லவிடாமல் தடுத்தனர். பின்னர் சித்ராவிடம், ‘உன்னுடைய கழுத்தில் அணிந்திருக்கும் தங்கசங்கிலியை கழற்றி கொடு.
இல்லையென்றால் கத்தியை எடுத்து உன்னை குத்திக்கொன்று விடுவோம்.’ என்றனர். இதனால் பயந்து போன சித்ரா தான் அணிந்திருந்த 5 பவுன் நகையை கழற்றி கொடுத்தார். நகையை பெற்றுக்கொண்ட 2 பேரும் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்றார்கள். இதுகுறித்து சித்ரா சித்தோடு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து பார்த்தனர். அதில் மர்மநபர்கள் 2 பேரின் உருவம் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உருவங்களை வைத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.
பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணை மிரட்டி நகை பறித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story