கவுரவ கொலை செய்ய போவதாக மிரட்டல்: பாதுகாப்பு கேட்டு காதல் திருமண ஜோடி கலெக்டரிடம் மனு


கவுரவ கொலை செய்ய போவதாக மிரட்டல்: பாதுகாப்பு கேட்டு காதல் திருமண ஜோடி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 8 Oct 2018 11:30 PM GMT (Updated: 2018-10-09T02:24:37+05:30)

கவுரவ கொலை செய்துவிடப்போவதாக மிரட்டல் வந்ததையடுத்து, காதல் திருமண ஜோடி பாதுகாப்பு கேட்டு கரூர் கலெக்டர் அன்பழகனிடம் மனுகொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டு மனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, புதிய குடும்ப அட்டை, கல்விக்கடன் மற்றும் குடிநீர் பிரச்சினை உள்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு தொடர்புடைய பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்றார். மொத்தம் 275 மனுக்கள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

கரூர் தாந்தோன்றிமலை அரசு கல்லூரி மாணவர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், தாந்தோன்றிமலை மாணவர் விடுதியில் இருந்து தங்கி கல்லூரியில் படித்து வரும் எங்களை சில காரணங்களால், காந்திகிராமத்தில் உள்ள விடுதிக்கு மாற்றம் செய்தனர். அந்த விடுதியில் போதிய இடவசதி மற்றும் தண்ணீர் வசதி இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறோம். மேலும் சீக்கிரமாக கல்லூரிக்கு புறப்பட்டு செல்ல முடியவில்லை. மேலும் விடுதி உணவும் ஆரோக்கியமானதாக இல்லை. எனவே தரமான உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கடவூர் தாலுகா வேப்பங்குடி பண்ணப்பட்டி கிராம மக்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற சந்தன கருப்பசாமி கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் கோவில் சிலைகளை சேதப்படுத்தி வீதியுலா வாகனங்களை தீயிட்டு கொளுத்தியுள்ளனர். எனவே போலீசார் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில் தடையின்றி பூஜை நடக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

புஞ்சைதோட்டக்குறிச்சி, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் மாட்டு வண்டியில் மணல் அள்ளும் தொழிலை நம்பி பல்வேறு குடும்பத்தினர் பிழைப்பு நடத்தி வருகின்றனர். தற்போது சில காரணங்களை கூறி ஆற்றில் மணல் அள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். எனவே காவிரி ஆற்றில் மணல் அள்ள உரிய அனுமதி தர வேண்டும். இல்லையெனில் எங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருந்தனர்.

கரூர் காந்திகிராமம் தெற்கு பகுதியை சேர்ந்த மணிமேகலை (வயது 18), தனது காதல் கணவர் கொளந்தானூரை சேர்ந்த வீரசங்கருடன்(25) வந்து கலெக்ட ரிடம் மனு கொடுத்தார். அதில், நானும் வீரசங்கரும் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக காதலித்து திருமணம் செய்துள்ளோம். இதையறிந்த எனது பெற்றோர் சில காரணங் களை கூறி மிரட்டி வருகின்றனர். மேலும் எங்களை கவுரவ கொலை செய்துவிடப்போவதாகவும் மிரட்டி வருகின்றனர். இதற்காக அடியாட்களை வைத்து எங்களை வலைவீசி தேடுகின்றனர். எனவே பசுபதிபாளையம் போலீசார் மூலம் எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று கூறியிருந்தார். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

இந்த கூட்டத்தின் போது கரூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் முன்னாள் படைவீரர்களுக்கான நலநிதியாக ரூ.70 ஆயிரத்திற்கான வரைவோலைகளை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பரமேஸ்வரன், செல்வி ஆகியோர் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். கடவூர் வட்டத்தின் சார்பாக 1 பயனாளிக்கு விதவைக்கான மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவை கலெக்டர் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் கலால் உதவி ஆணையர் சைபுதீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வசுரபி, மக்கள் குறை தீர்க்கும் தனித்துணை கலெக்டரும் (பொறுப்பு), பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அதிகாரியுமான குமரேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி லீலாவதி மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story