மண்டியா தொகுதி ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர் யார்? சிவராமேகவுடா- லட்சுமி அஸ்வினி கவுடா இடையே கடும் போட்டி


மண்டியா தொகுதி ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர் யார்? சிவராமேகவுடா- லட்சுமி அஸ்வினி கவுடா இடையே கடும் போட்டி
x
தினத்தந்தி 8 Oct 2018 10:15 PM GMT (Updated: 8 Oct 2018 9:32 PM GMT)

மண்டியா தொகுதி ஜனதாதளம் (எஸ்) வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த சிவராமேகவுடா- லட்சுமி அஸ்வினி கவுடா இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மண்டியா,

கர்நாடகத்தில் காலியாக உள்ள ராமநகர், ஜமகண்டி சட்டசபை தொகுதிகளுக்கும், சிவமொக்கா, மண்டியா, பல்லாரி ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

இந்த 5 தொகுதிகளுக்கான தேர்தலை காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன. அதன்படி ராமநகர் சட்டசபை தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியும், ஜமகண்டி சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மறைந்த சித்து நியாம கவுடா மகன் ஆனந்த் நியாம கவுடா வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பு அதிகம் என தகவல்கள் கூறுகின்றன.

அதுபோல் சிவமொக்கா, பல்லாரி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகள் காங்கிரசுக்கும், மண்டியா நாடாளுமன்ற தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கும் ஒதுக்கப்படுகிறது. இதில் பல்லாரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாகேந்திரா எம்.எல்.ஏ.வின் சகோதரருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது. சிவமொக்கா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை தேர்வு செய்ய தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.

மேலும் பா.ஜனதா 5 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதியில் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா களமிறக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. மற்ற 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் மண்டியா நாடாளுமன்ற தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) சார்பில் போட்டியிட மூத்த தலைவரான சிவராமேகவுடா விருப்பம் தெரிவித்துள்ளார். அதுபோல் இதே தொகுதியில் களமிறங்க லட்சுமி அஸ்வினி கவுடாவும் கோதாவில் குதித்துள்ளார். இதனால் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் யார்? என்ற பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

இருப்பினும் கட்சியின் மூத்த தலைவராக வலம் வரும் சிவராமேகவுடாவே மண்டியா தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் 25 ஆண்டுகளாக சிவராமே கவுடா கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஆனால் லட்சுமி அஸ்வினி கவுடா கடந்த 2017-ம் ஆண்டு தான் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இணைந்துள்ளார். இதனால் மண்டியா மாவட்ட ஜனதாதளம் (எஸ்) கட்சியினர் மத்தியில் சிவராமேகவுடா செல்வாக்குடன் திகழ்கிறார். இதனால் அவரையே மண்டியா தொகுதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

லட்சுமி அஸ்வினி கவுடா, கடந்த 2012-ம் ஆண்டு இந்திய ரெயில்வேயில் உதவி நிதித்துறை அலுவலராக பணியாற்றினார். 2017-ம் ஆண்டு அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் ஐக்கியமானார். இதனால் இவருக்கு வாய்ப்பு குறைவு என சொல்லப்படுகிறது.

இருப்பினும் மண்டியா முன்னாள் எம்.பி. நடிகை ரம்யா மாவட்ட காங்கிரஸ் கட்சியில் செல்வாக்குடன் திகழ்ந்தார். ஆனால் தற்போது மண்டியா மாவட்ட அரசியலில் இருந்து அவர் ஒதுங்கி இருந்து வருகிறார். இதனால் தற்போது மண்டியா மாவட்ட அரசியலில் லட்சுமி அஸ்வினி கவுடாவுக்கு செல்வாக்கு அதிகரித்து இருப்பதாகவும், இதனால் லட்சுமி அஸ்வினி கவுடாவை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருப்பினும் இருவரில் மண்டியா தொகுதி ஜனதா தளம் (எஸ்) கட்சி வேட்பாளராக சிவராமேகவுடாவுக்கு வாய்ப்பு அதிகம் என சொல்லப்படுகிறது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவதால், மண்டியா தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளராக யார் நிறுத்தப்பட்டாலும் வெற்றி உறுதி என அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ஏனெனில் மண்டியா மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளிலும் ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர்களே எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story