மாதனூர் அருகே மயானத்திற்கு செல்லும் வழியை அடைத்ததால் பொதுமக்கள் சாலை மறியல்


மாதனூர் அருகே மயானத்திற்கு செல்லும் வழியை அடைத்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 Oct 2018 10:38 PM GMT (Updated: 8 Oct 2018 10:38 PM GMT)

மாதனூர் அருகே மயானத்திற்கு செல்லும் வழியை அடைத்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆம்பூர்,

மாதனூர் அருகே பாலூர் ஊராட்சிக்குட்பட்ட ராஜபாளையம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் சரோஜா (வயது 70). இவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். அவரது உடலை மயானத்திற்கு எடுத்தும் செல்லும் வழியை நிலத்தின் உரிமையாளர் முள்வேலி வைத்து அடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் உடலை எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, இறந்த சரோஜா வீட்டின் முன்பு பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் யாரும் அங்கு வரவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மாதனூர் - ஒடுக்கத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், தாசில்தார் சுஜாதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இறந்தவரின் உடலை எடுத்தும் செல்லும் வழியில் அமைக்கப்பட்டு இருந்த முள்வேலியை தற்காலிகமாக அகற்றி விடுவதாகவும், பின்னர் இப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் நிரந்தர தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதிஅளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story