வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி 23-ந் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் - விக்கிரமராஜா


வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி 23-ந் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் - விக்கிரமராஜா
x
தினத்தந்தி 9 Oct 2018 4:18 AM IST (Updated: 9 Oct 2018 4:18 AM IST)
t-max-icont-min-icon

வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி வருகிற 23-ந் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று வேலூரில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

வேலூர்,

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் 752 கடைகள் உள்ளன. ‘ஸ்மார்ட்’ சிட்டி திட்டத்தில் நேதாஜி மார்க்கெட் நவீனமயமாக்கப்பட உள்ளது. இதையொட்டி ஏற்கனவே அங்குள்ள கடைகள் இடிக்கப்பட்டு, புதிதாக கடைகள் கட்டப்பட உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிதாக கட்டப்படும் கடைகளில் 752 கடை வியாபாரிகளுக்கும் எவ்வித நிபந்தனையும் இன்றி முதலில் கடைகள் ஒதுக்க வேண்டும். அதன்பின்னரே மீதமுள்ள கடைகளை பொதுஏலம் விட வேண்டும் என வணிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நேற்று வேலூர் நேதாஜி மார்க்கெட்டை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் வேலூர், திருப்பூர், மதுரை, தஞ்சாவூர் ஆகிய 4 மாநகராட்சிகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நேதாஜி மார்க்கெட்டில் 752 கடைகள் உள்ளன. இதனால் 752 குடும்பங்கள் மட்டும் பயனடையவில்லை. இதனை நம்பி மறைமுகமாக 10 ஆயிரம் உழைப்பாளர்கள் வாழ்கின்றனர்.

இந்த மார்க்கெட்டை இடித்து விட்டு நவீன முறையில் கட்டிடங்கள் கட்ட அரசு தீர்மானித்துள்ளது. எங்களின் கோரிக்கை என்னவென்றால், புதிய கட்டிடத்தில் 752 வியாபாரிகளுக்கும் கடைகளை முதலில் ஒதுக்க வேண்டும். அதன்பிறகே மற்ற கடைகளை பொது ஏலம் விடவேண்டும். அனைத்து கடைகளையும் பொதுஏலத்தில் விடுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு செய்தால் ஏற்கனவே கடை வைத்திருக்கும் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதுதொடர்பாக வணிகர் சங்க நிர்வாகிகள், உள்ளாட்சித்துறை அமைச்சர், முதல்- அமைச்சரை சந்தித்து மனு அளித்து உள்ளோம்.

வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி தமிழகம் முழுவதும் 23-ந் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். வேலூர் மண்டலம் சார்பில் அண்ணா கலையரங்கம் அருகே உண்ணாவிரதம் நடைபெறும்.

முதல்-அமைச்சர் வணிகர் சங்க நிர்வாகிகளை அழைத்து இப்பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் வணிகர் சங்கங்களின் சார்பில் காலவரையற்ற கடையடைப்பு உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும். குறிப்பாக டிசம்பர் மாதம் 16-ந்தேதி நாடு முழுவதும் உள்ள வணிகர் சங்கங்களை ஒருங்கிணைத்து பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தி ஊர்வலம் நடத்த உள்ளோம் என்று அவர் கூறினார்.

அப்போது மாநில இணைசெயலாளர்கள் நடராஜன், குமார், மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், மாவட்ட தலைவர் ஆம்பூர் கிருஷ்ணன், செயலாளர் ஞானவேலு, பொருளாளர் மணி, காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் பாலு, வேலூர் அனைத்து வணிகர்கள் சங்க பொருளாளர் அருண்பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story