விருத்தாசலம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி


விருத்தாசலம் அருகே  மின்னல் தாக்கி விவசாயி பலி
x
தினத்தந்தி 9 Oct 2018 3:30 AM IST (Updated: 9 Oct 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலியானார்.

கம்மாபுரம், 

விருத்தாசலம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலியானார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இந்த மழையால் அப்பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும் அறுவடைக்கு தயாரான வயல்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. நேற்று முன்தினம் மழை நின்றதால், மழைநீர் அனைத்தும் வடிய ஆரம்பித்தது.

இந்நிலையில் நேற்று மதியம் வரை வெயில் அடித்த நிலையில், பிற்பகல் 3 மணி அளவில் விருத்தாசலம், கம்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பித்தது. சற்று நேரத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது கம்மாபுரத்தை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் (வயது 60) என்பவர் அதே பகுதியில் பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள விளைநிலத்தில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் ராமச்சந்திரன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி தகவல் அறிந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராமச்சந்திரனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து அறிந்த கம்மாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராமச்சந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story