மங்களூர் துணை மின்நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்கக்கோரி நடந்தது


மங்களூர் துணை மின்நிலையத்தை கிராம மக்கள் முற்றுகை பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்கக்கோரி நடந்தது
x
தினத்தந்தி 8 Oct 2018 9:45 PM GMT (Updated: 8 Oct 2018 11:24 PM GMT)

பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்கக்கோரி மங்களூர் துணை மின்நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

சிறுபாக்கம், 


சிறுபாக்கம் அருகே உள்ளது விநாயகனந்தல் கிராமம். இந்த கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் மின்மாற்றி அமைத்து மங்களூர் துணை மின்நிலையம் மூலம் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்மாற்றி பழுதடைந்தது. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதன் காரணமாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் குடிநீர் வினியோகமும் தடைபட்டதால் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலையில் மங்களூர் துணை மின்நிலையத்துக்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் தங்கள் பகுதியில் பழுதடைந்த மின்மாற்றியை சீரமைத்து மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி துணைமின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த துணை மின்நிலைய அதிகாரி சுரேந்திரகுமார், சிறுபாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, தனசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழுதடைந்த மின்மாற்றியை சீரமைத்து உடனடியாக மின்வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story