கோர்ட்டில் ஜாமீன் பெற போலி சான்றிதழ் தயாரித்த பெண் கைது


கோர்ட்டில் ஜாமீன் பெற போலி சான்றிதழ் தயாரித்த பெண் கைது
x
தினத்தந்தி 10 Oct 2018 4:15 AM IST (Updated: 9 Oct 2018 7:15 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் கோர்ட்டில் ஜாமீன் பெற போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்த பெண் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர்,

திருப்பூர் எஸ்.ஏ.பி. பகுதியை சேர்ந்தவர் மாசானவடிவு (வயது 37). இவர் திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக வளாகத்தில் அமர்ந்து, சான்றிதழ் கேட்டு வரும் பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் சிலரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு போலி சான்றிதழ் தயார் செய்து கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இது குறித்து வடக்கு தாசில்தார் ஜெயக்குமாருக்கு தகவல்கள் கிடைத்தது. அதன்பேரில் மாசானவடிவை கையும், களவுமாக பிடிக்க தாசில்தார் மற்றும் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் மணி என்பவரை நியமித்தனர். அவர் மாசானவடிவை தொடர்பு கொண்டு, கோர்ட்டில் ஜாமீன் மனு பெற வேண்டும் என்றும், அதற்கு சான்றிதழ் ஒன்று தேவைப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.

அதற்கு அரசு அதிகாரிகள் கையெழுத்து மற்றும் முத்திரைகள் போன்றவற்றை தான் பார்த்துக்கொள்வதாகவும், ரூ.8 ஆயிரம் செலவாகும் என்று மாசானவடிவு கூறியுள்ளார். தொடர்ந்து முன்பணமாக மணி ரூ.2,500–ஐ கொடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாசானவடிவை தொடர்பு கொண்டு ஜாமீன் மனு தயாராகி விட்டதா? என்று மணி கேட்டுள்ளார்.

அப்போது சான்றிதழ் தயாராக இருக்கிறது என்றும், வடக்கு தாலுகா அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொள்ளும்படியும் மாசானவடிவு தெரிவித்துள்ளார். அதன்படி அங்கு சென்ற மணியிடம் ஜாமீன் பெறுவதற்கான சான்றிதழை கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவரை தாசில்தார் அலுவலகத்திற்கு மணி அழைத்து சென்றார். அங்கு அவரிடம் சப்–கலெக்டர் ஷ்ரவன்குமார், தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் அவரை திருப்பூர் வடக்கு போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் மாசானவடிவு பொதுமக்களிடம் சான்றிதழ் வாங்கி தருவதாகக்கூறி தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோரின் கையெழுத்திட்டு போலி சான்றிதழ்கள் தயாரித்து கொடுத்து வந்ததும், இதற்கு ரூ.8 ஆயிரம் வரை பணம் வாங்கி வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மாசானவடிவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து போலி சான்றிதழ்கள் மற்றும் அரசு முத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும், சான்றிதழ் தயாரிக்க சிலர் தனக்கு உதவி செய்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இதில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story