மழைக்கு தாங்காத மதுரை: கண்மாய்களில் உடைப்பு; வீடுகளில் வெள்ளம் புகுந்தது


மழைக்கு தாங்காத மதுரை: கண்மாய்களில் உடைப்பு; வீடுகளில் வெள்ளம் புகுந்தது
x
தினத்தந்தி 10 Oct 2018 3:45 AM IST (Updated: 9 Oct 2018 8:10 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் பெய்த மழையால் கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு, வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

மதுரை,

மதுரை வைகை அணையில் இருந்து இரு போக சாகுபடிக்காக பெரியார் பாசன வாய்க்காலில் கடந்த மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரானது பாசனத்திற்கு தவிர மதுரை மாநகருக்கு அருகில் உள்ள கண்மாய்கள் பக்கமும் திருப்பி விடப்பட்டது. இதனால் கண்மாய்கள் வேகமாக நிரம்பி வந்தன.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மதுரையில் தொடர் மழை இருந்தது. அதில் உச்சகட்டமாக கடந்த 7–ந் தேதி நள்ளிரவு முதல் இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அன்றைய தினம் மட்டும் மாவட்டத்தில் சராசரியாக 42.69 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதிகபட்சமாக சிட்டம்பட்டியில் 122, விரகனூரில் 110.50, கள்ளந்திரியில் 90, தல்லாகுளத்தில் 80 மி.மீட்டர் மழை பெய்தது.

இந்த மழை காரணமாக ஏற்கனவே நிரம்பி வந்த கண்மாய்கள் முழு கொள்ளவை எட்டி, தண்ணீர் மறுகால் பாயத்தொடங்கியது. குறிப்பாக ஆனையூர், வண்டியூர், செல்லூர், ஆலங்குளம், ஆத்திக்குளம், ஊமச்சிக்குளம், கடச்சனேந்தல், சிலையனேரி, பூதக்குடி, கோசாக்குளம், தபால் தந்தி நகர், நாராயணபுரம் கண்மாய்கள் கொள்ளவை எட்டின.

தொடர் நீர்வரத்து காரணமாக இந்த கண்மாய்களில் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து வெளியேறிய தண்ணீரானது, வாய்க்கால்களில் சேர்ந்தது. ஆனால் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் சிக்கி சுருங்கி போய் இருந்ததால், நீர் முழு அளவில் வெளியேற முடியாமல் சாலைகளில் பாய்ந்தோடியது. பின்னர் வீடுகளையும் வெள்ளம் சூழந்துகொண்டது.

பள்ளமான இடத்தில் இருந்த வீடுகள் அனைத்திலும் நீர் புகுந்தது. குறிப்பாக குலமங்கலம் சாலை, பனங்காடி ஆனந்தா நகர், நரிமேடு சி.எஸ்.ஐ. சாலை, செல்லூர் கட்டபொம்மன் நகர், கூடல்புதூர் ஆகிய பகுதிகளில் வீடுகளில் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தூக்கமின்றி, உணவின்றி தவித்து வருகின்றனர். மின்சாரமும் துண்டிக்கப்பட்டு இருந்ததால் கடும் அவதிக்குள்ளாகினர். சிலர் வீடுகளில் புகுந்த மழை நீரை, குடம்–வாளிகள் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறியதாவது:–

மதுரையை சுற்றியுள்ள கண்மாய்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் சிக்கி பாதி அளவுக்கு சுருங்கி விட்டன. இதனால் கண்மாய்களில் முழு அளவு தண்ணீர் தேக்க முடியாமல் மறுகால் பாய தொடங்கி விட்டது. அதே போல் வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் பல இடங்களில் தண்ணீர் வெளியேற முடியாமல் வீடுகளுக்குள் புகுந்தது. கடந்த 7–ந் தேதி நள்ளிரவு முதல் வீடுகளுக்குள் தண்ணீர் வரத்தொடங்கியது. எங்களால் அதனை தடுத்து நிறுத்த முடியவில்லை. சில மணி நேரங்களிலேயே வீடு முழுவதும் தண்ணீர் சூழ்ந்துவிட்டது.

கடந்த 2 நாட்களாக தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற யாரும் வரவில்லை. ஏதோ ஒரு தீவில் சிக்கி கொண்டது போல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். குழந்தைகளை உறவினர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைத்து விட்டு, நாங்கள் தண்ணீரின் நடுவே இருக்கிறோம். உண்ண உணவும் இல்லை. மின்சாரமும் இல்லை.

மழை பெய்யாதா என்று கடந்த சில ஆண்டுகளாக ஏங்கி கொண்டு இருந்தோம். ஆனால் தற்போது பெய்த மழைக்கே மதுரை தாங்க வில்லை. இதற்கெல்லாம் கண்மாய்களை தூர்வாராமல் விட்டது, ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் விட்டதுதான் மூலக்காரணம். கிடைத்த மழை நீரையும் சேமிக்க முடியாமல் வீணாக போய்விட்டது.

அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளம் வடியும் வரை எங்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை செய்துகொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story