கடல் அலைகளின் வேகத்தால் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் மணல் அரிப்பு
தனுஷ்கோடி பகுதியில் கடல் அலைகளின் வேகத்தால் கடற்கரை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. சவுக்கு மரங்களை நட்டு வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே உள்ள புயலால் அழிந்து போன தனஷ்காடி அரிச்சல்முனை கடற்கரை வரையிலும் 53 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம் புதிதாக தார்ச்சாலை போடப்பட்டுள்ளது. இந்த புதிய சாலையானது கடந்த ஆண்டு பிரதமரால் திறந்து வைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வரையிலும் உள்ள இந்த சாலை மற்றும் கடல் பகுதியை காண ஏராளமான சுற்றுலா பணிகள் தினசரி வருகின்றனர். இதேபோல் தமிழகத்தில் உள்ள கடல் பகுதிகளிலேயே தனுஷ்கோடி கடல் பகுதி கொந்தளிப்பகாவும், கடல் நீரோட்டம் அதிகமாகவும் உள்ள கடல் பகுதியாகும்.
இந்தநிலையில் தனுஷ்கோடி கடல் பகுதியில் கடல் அலைகளின் வேகத்தாலும், கடல் அரிப்பாலும் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து அரிச்சல்முனை கடற்கரை வரையிலும் 9 கி.மீ. தூரத்தில் கடற்கரை பகுதிகள் கடல் அரிப்பால் மண் அரிக்கப்பட்டு கடற்கரை பகுதியே வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அதுபோல் தெற்கு கடற்கரை பகுதியில் சில இடங்களில் சாலை அருகின் வரையிலும் கடல் அரிப்பால் மண் அரிக்கப்பட்டுள்ளதால் சாலைகள் சேதமடையும் நிலை உள்ளது.
கடல் அலைகளின் வேகம், மண் அரிப்பு உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்துவதில சவுக்கு மரங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. எனவே தனுஷ்கோடி கடற்கரை பகுதியை கடல் அரிப்பாலும், மண்அரிப்பில் இருந்தும் பாதுகாக்கும் பொருட்டு எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் இருந்து அரிச்சல்முனை வரையிலும் சாலையின் இருபுறமும் உள்ள கடற்கரை பகுதியில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு ஏராளமான சவுக்கு மரக்கன்றுகள் நட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.