திருப்புவனம் அருகே 2,000 ஆண்டு பழமையான உறைகிணறு கண்டெடுப்பு


திருப்புவனம் அருகே 2,000 ஆண்டு பழமையான உறைகிணறு கண்டெடுப்பு
x
தினத்தந்தி 10 Oct 2018 4:30 AM IST (Updated: 9 Oct 2018 8:18 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 2 தினங்களுக்கு முன்பு பசியாபுரத்தில் உறைகிணறு கண்டுபிடித்த நிலையில், திருப்புவனம் அருகே 2,000 ஆண்டு பழமையான மற்றொரு உறைகிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்புவனம்,

திருப்புவனம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழடியில் தமிழர் நாகரிகத்தை அறியும் வகையில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. 4 கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் ஏராளமான பழங்கால பொருட்கள் கிடைத்தன. இதன்மூலம் கீழடியில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே நகரங்கள் அமைத்து தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன. கீழடி போன்று திருப்புவனம் பகுதியில் பல கிராமங்களில் பழங்கால பொருட்கள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளது. இதற்கிடையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பசியாபுரம் அருகில் உள்ள கண்மாயில் பழங்கால மண்பானைகள், உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்புவனம் அருகே உள்ளது லாடனேந்தல் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து டி.ஆலங்குளம் செல்லும் பாதை உள்ளது. இந்த பாதையின் குறுக்காக மதுரை–ராமேசுவரம் ரெயில் தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாள பகுதியை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடந்து சென்று வருகின்றனர். அங்கு ரெயில்வே கேட் கிடையாது. இதனால் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து அங்கு சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு ரூ.1¼ கோடியில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று சுரங்கப்பாதைக்காக மண் மேடு தோண்டும் பணி, மேற்பார்வையாளர்கள் ராஜன், பிரபு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு தோண்டியபோது பழங்கால உறைகிணறு தென்பட்டது.

இதுகுறித்து ராஜன், பிரபு ஆகியோர் கீழடியில் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வரும் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன், இணை இயக்குனர் சிவானந்தம் ஆகியோரது உத்தரவின்பேரில் கீழடியில் அகழ்வாராய்ச்சி செய்து வரும் அதிகாரிகள் லாடனேந்தல் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த பழங்கால உறைகிணறு, 2,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுமக்கள் கூறும்போது, திருப்புவனத்தில் இதுபோன்று பழங்கால பொருட்கள் இருப்பதால், இப்பகுதியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணியை செய்ய வேண்டும் என்றனர்.


Next Story