அமராவதி குடிநீர் மீண்டும் வழங்கக்கோரி தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
அமராவதி குடிநீர் மீண்டும் வழங்கக்கோரி தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
தாராபுரம்,
தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு, அமராவதி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது சில ஊராட்சிகளில் மட்டும் திடீரென அமராவதி குடிநீர் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக காவிரி குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் கிராம மக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்காமல், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக புகார் எழுந்தது.
குடிநீர் வடிகால்வாரிய அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால், அதிகாரிகளை கண்டித்தும், அமராவதி குடிநீர் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரியும், காலிக்குடங்களுடன் பெண்கள் தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக தாராபுரம் புறவழிச்சாலையில் உள்ள அமராவதி சிலை அருகே பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டார்கள். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பொள்ளாச்சி சாலையில் உள்ள சப்–கலெக்டர் அலுவலகத்தை அடைந்தனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் கூறியதாவது:–
கடந்த 30 ஆண்டுகளாக தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நஞ்சியம்பாளையம், தொப்பம்பட்டி, கெத்தல்ரேவ், சின்னமோளரபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு அமராவதி குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. அவ்வப்போது ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக, கூடுதலாக காவிரி குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் தற்போது குடிநீர் வடிகால் வாரியம், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென அமராவதி குடிநீர் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, காவிரி குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கி வருகிறது. அதிகாரிகளின் தன்னிச்சையான இந்த நடவடிக்கையால் கிராமங்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
போதுமான குடிநீர் இன்றி பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எங்களுக்கு அமராவதி குடிநீர் திட்டத்தில் தான் குடிநீர் வழங்க வேண்டும். அமராவதி குடிநீர் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால், அடுத்தகட்ட போராட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறுஅவர்கள் கூறினார்கள்.
இது பற்றிய தகவல் அறிந்த அதிகாரிகள் முற்றுகையில் ஈடுபட்டிருந்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உயர்அதிகாரிகளிடம் தெரிவித்து விரைவில் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் காளிமுத்து எம்.எல்.ஏ. சம்பவ இடத்திற்கு வந்து, முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.